TN Assembly: டிசம்பர் 9ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்.. எதிர்க்கட்சிகளின் பிளான் என்ன?
TN Government: சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் தற்போது நடைபெற உள்ள கூட்டத்தொடர் தொடங்கி தேர்தலுக்கு முந்தைய கூட்டத்தொடர் வரை அனைத்தும் மிக முக்கியமானதாக கருதப்படும். டிசம்பர் 9 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவும் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் தற்போது நடைபெற உள்ள கூட்டத்தொடர் தொடங்கி தேர்தலுக்கு முந்தைய கூட்டத்தொடர் வரை அனைத்தும் மிக முக்கியமானதாக கருதப்படும். டிசம்பர் 9 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் அப்பாவு அவர்கள் தலைமையில் கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரில் தேர்தலை மனதில் வைத்து தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக குற்றம் சாட்டி வரும் எதிர்கட்சிகள் அது தொடர்பாக சட்டசபையில் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கூட்டத் தொடர் கடுமையான விவாதங்களுடன் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் துணை முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். அது மட்டுமல்லாமல் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை பற்றியும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: மின்னணு இயந்திரம், அதானி விவகாரம்.. கார்த்தி ப சிதம்பரம் ஒபன் டாக்!
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர்
கடைசியாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் நாளில் மறைந்த எம்எல்ஏ, எம்பிக்கள் போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூன் 21ம் தேதியிலிருந்து அரசுத்துறை மானியக் கொள்கைகள் மீதான எம்எல்ஏக்களின் விவாதம் நடைபெற்றது. அதற்கு அமைச்சர்கள் பதிலுரை வழங்கினர். மேலும் 55 மானியக் கோரிக்கையின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. 9 நாட்களும் காலை மாலை என இருவேளைகளும் சட்டப்பேரவை கூடிய நிலையில் தமிழகத்தையே அதிர வைத்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு ஜூன் 26 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதியிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருந்தனர். இதற்கிடையில் கடைசி நாளான ஜூன் 29ஆம் தேதி உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
Also Read: Sathyaraj: கருணாநிதி பொறாமைப்பட்ட நிகழ்வு.. நெகிழ்ச்சியுடன் நினைவுக்கூர்ந்த சத்யராஜ்!
அதில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. மேலும் தொழில்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, சுகாதாரத்துறை என அனைத்து துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்று துறை ரீதியாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதன்பின்னர் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.