5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema: யூட்யூப் சேனல்களை உள்ளே விடாதீங்க..தியேட்டர்களுக்கு பறந்த உத்தரவு

எக்கச்சக்கமான போட்டிகளில் சினிமா உலகம் தள்ளாடி வருகிறது. ஓடிடியில் படம் வெளியாகி 4 வாரங்களிலேயே வந்து விடுகிறது. எவ்வளவோ முறை தயாரிப்பாளரிடம் சொல்லி விட்டோம். படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுங்கள் என கூறுகிறோம். இந்தி திரையுலகில் அப்படித்தான் வைத்திருக்கிறார்கள்.

Cinema: யூட்யூப் சேனல்களை உள்ளே விடாதீங்க..தியேட்டர்களுக்கு பறந்த உத்தரவு
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Nov 2024 19:12 PM

விமர்சனம் என்ற பெயரில் உங்களுடைய அபிப்பிராயங்களை மக்கள் மீது திணிக்காதீர்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீப காலமாக வெளியாகும் படங்களுக்கு விமர்சனம் செய்கிறோம் என்ற பெயரில் பலரும் இணையத்தில் யூட்யூப் சேனல் தொடங்கி கொண்டு தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு மிகப்பெரிய உதாரணமாக இந்தாண்டு வந்த இந்தியன் 2 மற்றும் கங்குவா படங்கள் அமைந்து விட்டது. இப்படியான நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்  இன்று செய்தியாளர்களை சந்தித்து பல விஷயங்களை பேசினார்.

தரம் தாழ்ந்து விமர்சனம்

அதாவது, “தொடர்ந்து சமீப காலமாக திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு விமர்சனங்கள் மிகவும் தரம் தாழ்ந்து வெளிப்படுகிறது. இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.  கடந்த 7 மாதங்களில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா போன்ற பெரிய படங்களை  குறிப்பிடலாம். ஒவ்வொரு படமும் ரூ. 300 கோடி, 400 கோடி செலவு செய்து எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு படமும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக பிடிக்கும்.

Also Read: Crime: ஆளில்லா நேரத்தில் அத்துமீறல்.. இளம்பெண் அளித்த புகாரில் பிரபல பாடகர் கைது!

ஆனால் தயாரிப்பாளர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படுகிறது.கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களிலும் காலை 3 மணிக்கே படம் பற்றிய தகவல்களை கொடுத்து விடுகிறார்கள. 4 மணி அளவில் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் படங்கள் வெளியாகும் போது யூட்யூப் சேனலில் வேலை செய்பவர்கள் அங்கு போய் படம் பார்த்துவிட்டு அதை தன்னுடைய பார்வையில் நிறைகளை சொல்வது கிடையாது. அதனுடைய குறைகளை பில்டப் செய்து சொல்கிறார்கள்.

காலை 6.30 மணிக்கு படம் முடிந்ததும் 7 மணிக்கு வீடியோ போட்டு விடுகிறார்கள். ஒரு மணி நேரத்தில் 40 லட்சம், 50 லட்சம் மக்கள் இந்த வீடியோவை பார்க்கின்றனர்.  இதனால் தமிழ்நாட்டில் முதல் நாள் முதல் காட்சியில் பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது.  இதனை முதல் தயாரிப்பாளர்கள் மாற்ற வேண்டும். இந்தியா முழுவதும் காலை முதல் காட்சி 9  மணிக்கு தான் திரையிட வேண்டும். இதேபோல் விமர்சனங்கள் படத்தை நிறை குறைகளை சொல்ல வேண்டும். ஆனால் நிறைகளை காட்டிலும் குறைகளை தான் ஹைலைட் செய்து காட்டுகிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்களின் டிஆர்பி ஏற வேண்டும் என்பதற்காகவும்,  நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தால்தான் மக்கள் பார்ப்பார்கள் நினைத்துக் கொண்டும் செய்கிறார்கள். சிலர் அவர்களே கண்டெண்டுகளை ரெடி செய்து படத்தைப் பற்றி மிக கேவலமாக சொல்கிறார்கள். தனிமனித தாக்குதலெல்லாம் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஹோட்டல், துணிக்கடை போன்ற எந்த ஒரு தொழில் செய்யும் இடத்தில் போய் அந்த இடம் நல்லா இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?

Also Read: ’மூக்குத்தி அம்மன் 2’ இயக்காததற்கு இதுதான் காரணம்.. விஷயத்தை கூறிய ஆர்.ஜே. பாலாஜி

தியேட்டர் உரிமையாளர்களுக்கு வேண்டுகோள்

சினிமா தியேட்டர் வளாகத்திற்கு உள்ளே வந்துக்கொண்டு இந்த படம் மோசமாக உள்ளதால் போகாதீர்கள் என  சொல்லக்கூடிய உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது?. இந்த சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு ஒன்றை வாங்கினார்.

நான் பணம் போட்டு படம் எடுத்துள்ளேன். என்னுடைய படத்துக்கு ரிலீசான தேதியில் இருந்து 7 நாட்களுக்கு எந்த வித விமர்சனம் வெளிவரக்கூடாது. படம் நன்றாக இருக்கும் என்றால் மக்கள் வரப்போகிறார்கள். இல்லாவிட்டால் வராமல் இருக்கிறார்கள். ஆனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவரும் படுமோசமாக விமர்சனங்கள் சம்பந்தப்பட்ட படங்கள் மேலேழுந்து வருவது கடினமாகிவிடுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலை இன்று உருவாகிவிட்டது. நான் குறிப்பிட்ட மூன்று படங்களும் விமர்சனங்களை பார்த்துவிட்டு இந்த படங்களுக்கு  போகாமல் இருப்பது நல்லது என்று பலரும் நினைக்கும் அளவுக்கு நடந்து விட்டது.

யாரையும் உள்ளே விடாதீங்க

எக்கச்சக்கமான போட்டிகளில் சினிமா உலகம் தள்ளாடி வருகிறது. ஓடிடியில் படம் வெளியாகி 4 வாரங்களிலேயே வந்து விடுகிறது. எவ்வளவோ முறை தயாரிப்பாளரிடம் சொல்லி விட்டோம். படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுங்கள் என கூறுகிறோம். இந்தி திரையுலகில் அப்படித்தான் வைத்திருக்கிறார்கள். நான் இரண்டு விஷயங்களை கேட்டுக் கொள்கிறேன். ஒன்று 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் படங்கள் திரையிட வேண்டும்.

இரண்டாவது திரையரங்க உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் யூட்யூப் சேனல்களை வளாகத்திற்குள் வந்து விமர்சனம் பெறுவதை கண்டிப்பாக தடுக்க வேண்டும். உங்களுடைய தியேட்டரில் போடப்பட்டுள்ள படத்தை நல்லா இல்லை என சொல்வது, நம்முடைய வசூலை நாமே தடுப்பதற்கு சமம். இதனை அன்பாக வேண்டுகோளாக தியேட்டர் உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வரும் காலத்தில் கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் போல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும் வாங்க வேண்டும்.

குறைந்தப்பட்சம் 7 நாட்களாவது விமர்சனம் வர வேண்டாம். முன்பெல்லாம் பத்திரிக்கைகளில் மட்டும் தான் விமர்சனம் வரும். அது மக்கள் கைக்கு கிடைக்கவே குறைந்தப்பட்சம் ஒரு வாரம் ஆகும். அதற்கிடையில் நன்றாக இருந்தால் மக்கள் படம் பார்க்க வருவார்கள், இல்லாவிட்டால் வராமல் இருப்பார்கள். ஆனால் இப்போது முதல் நாளே அந்த படத்தை அடித்து துவைத்து குற்றுயிரும், குலையுயிருமான மாற்றி விடுகிறார்கள்.

கங்குவா படத்தின் தயாரிப்பாளர் முதல் நாள் இரவு எவ்வளவு சிரமப்பட்டு வெளியிட்டார் என்பது திரையுலகைச் சேர்ந்த எங்களுக்கு மட்டும் தான் தெரியும். அந்த படத்துக்கு அபரிமிதமான செலவை அவர் செய்து விட்டார். அதனால் ரிலீஸ் நேரத்தில் ரொம்ப சிரமப்பட்டு விட்டார். அப்படிப்பட்ட நிலையில் படம் ரிலீசான நாள் படத்துக்கு வராதீங்க.. போகாதீங்க என சொல்வதால் முதலீடு செய்யும் அவரின் மனம் எந்தளவு சங்கடப்படும்?. இன்றைக்கு சினிமா இருக்கும் நிலையில் சிரமப்பட்டு தான் முதலீடு செய்கிறார்கள். அதனை நாங்கள் திரும்ப எடுக்க ஒரு கால அவகாசம் இருக்க வேண்டும் அல்லவா! விமர்சனம் சொல்ல வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் உங்களின்  அபிப்ராயத்தை மக்களிடம் திணிக்காதீர்கள்” என திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Latest News