‘உஷார்.. வெப்ப அலை வீசும்..’ தமிழகத்துக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுத்த வானிலை மையம்!
அதிக வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக தமிழகத்துக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக ஏப்ரம் மாதம் முதல் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். மதிய வெயில் நேரங்களில் சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் வெளியே வர வேண்டாமெனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் அதிக வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக தமிழகத்துக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் வெப்ப அலையால் புழுக்கம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, சென்னை வானிலை மையம் கொடுத்த வானிலை எச்சரிக்கையில், ”27ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–38° செல்சியஸ் இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” எனக் குறிப்பிட்டுள்ளது.