Today’s Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு:
- வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 துறைமுகளில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
- நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
- சென்னை தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் உள்ள 351 அம்மா உணவகங்களையும் மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
- கர்நாடக அணைகளில் இருந்து காவிரிக்கு விநாடிக்க 53 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 44 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 56 அடியாக உயர்ந்துள்ளது.
இந்தியா:
- ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.3 ஆயிரம் ராணுவ வீரர்கள், 500 சிறப்பு படையினரை கூடுதலாக அனுப்பி வைப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- கோவாவுக்கு தென்மேற்கே அரபிக் கடல் பகுதியில் சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- சுங்கச்சாவடிகள் வழியே பயணிக்கும் வாகனங்களின் முன்புற கண்ணாடியில் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்றால் இரட்டிப்பு சுங்கக் கட்டணம் வசூலிக்கும்படி தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- விண்டோஸ் பிரச்சனையால் சில வங்கிகளில் மட்டுமே சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- உத்தர பிரசேதத்தில் திப்ருகர் விரைவு ரயில் தடம் புரண்டதற்கான காரணத்தை கண்டறிய ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணையை தவிர உயர் மட்ட விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
உலகம்:
- திடீரென மைக்ரோசாஃப்ட் முடங்கியது. இந்த தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடவுள் எனது பக்கம் உள்ளார். நான் இங்கு இருந்திக்க வேண்டியவனே இல்லை. கடவுளின் கருணையால் இங்கு உங்கள் முன் நிற்கிறேன் என்று துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மனம் திறந்து பேசியுள்ளார்.
- இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.
விளையாட்டு:
- 9வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதனுடன் நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். அர்ஜெண்டினாவின் மரியானோ நவோனை வீழ்த்தி 6-7, 7-5, 7-5 என்ற செட் கணக்கல் வென்றார் நடால்.
Also Read: சென்னையில் இன்று பவர்கட்.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ..