Today’s Top News Headlines: அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் ஜோ பைடன்.. இன்றைய முக்கியச் செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்: உலகம் முழுவதும் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை செய்திகளாக இந்த தொகுப்பில் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை அனைத்தும் இடம் பெற்றுள்ளது. மேலும் வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி, முதல 2 நாட்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. அங்கு கனமழை கொட்டித் தீர்ப்பதால் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஓரிடு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கரூரில் மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பியபோது அரவக்குறிச்சி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில் பலத்த காயங்கலுடன் மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- திருச்சியில் மணல் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற போது சிறகனூர் அருகே விபத்து நடந்துள்ளது.
உலகம் :
- அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். நாட்டின் நலன், ஜனநாயக கட்சியின் நலன் மற்றும் தமது நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
- வங்க தேசத்தில் இருந்து 49 மாணவர்கள் பத்திரமாக சென்னை திரும்பினர். இட ஒதுக்கீடு தொடர்பாக அங்கு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவ்வப்போது அங்கு கலவரம் வெடித்து வருகிறது. இதன் காரணமாக அங்கிருந்து இந்திய மாணவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா :
- நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதால் நீட் முறைக்கேடு, துணை சபாநாயகர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.
- சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு முறையை நீதிமன்றம் ரத்து செய்ததன் எதிரொலியாக வங்கதேசத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.
விளையாட்டு :
- ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் ஐக்கிய அரபு அமீரக அணியை 78 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அதன்படி 202 ரன்கள் இலக்குடன் விளையாடிய அமீரக அணி, 123 ரன்களில் வீழிச்சியடைந்தது.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டியில் முன்னணி வீரர் நடாலை வீழ்த்தி போர்ச்சுகலின் போர்கஸ் பட்டம் வென்றது.