School Leave: கனமழை எதிரொலி.. 2 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Cyclone Fengal: தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலூரில் நாளை (நவம்பர் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெங்கல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கடலூர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை (நவம்பர் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் மற்றும் காரைக்கால் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை (நவம்பர் 29) காலைக்குள் தற்காலிக புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், அதன்பின் வரும் 30ஆம் தேதி காரைக்கால்-மகாபலிபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில், அந்தமான தீவுகளுக்கு தெற்கே கடந்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது படிப்படியாக வலுப்பெற்று முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாவும், பின்னர், ஆழ்ந்த மண்டலமாகவும் மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதலில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்தது.
இதனால் இலங்கையின் கிழக்குக் கடற்கரையை நெருங்கியது. நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை – திரிகோணமலையிலிருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
Also Read : உருவாகிறது தற்காலிக புயல்.. எங்கே, எப்போது கரையை கடக்கும்?
மேலும், இன்று மாலை முதல் 29-ஆம் தேதி காலை வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் பொழுது புயலாக வலுப்பெறும் என்றும் அப்போது காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிடட டெல்டா மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. பெரும்பாலான வயல்களில் இருந்து தண்ணீர் வடியவில்லை. இதன் காரமணாக நெற்பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள். புயல் சின்னம் தாமதமாக கரையை கடப்பதால் டிசம்பர் 2ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதோடு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read : ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்னாச்சு? நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
வரும் 30 ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.