School Leave: ஃபெங்கல் புயல்… 9 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Fengal Cyclone: ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று பிற்பகல் ஃபெங்கல் புயல் உருவானது.
ஃபெங்கல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று பிற்பகல் ஃபெங்கல் புயல் உருவானது. இந்த புயல் நாளை மதியம் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை, காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே புயலாக கடக்கக்கூடும். இந்த புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட்
இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read : வங்கக் கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. வெளுக்கப்போகும் மழை!
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
உருவானது ஃபெங்கல் புயல்
வங்கக் கடலில் கடந்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. வரும் 25 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகவும், அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஆகவும் இது உருமாறியது. இது படிப்படியாக வலுவடைந்து இலங்கையை நெருங்கியது. அதன்பிறகு வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் புயலாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டது.
இதற்கு ஃபெங்கல் எனும் பெயர் வைக்கப்பட்டது. ஆனால், பல்வேறு இயற்கை குறுக்கீடுகள் காரணமாக அது புயலாக மாறுவது தடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாது அந்த புயல் சின்னத்தின் நகரும் வேகமும் குறைந்தது. தொடக்கத்தில் 30 கி.மீ வேகத்தில் நகர்ந்தது. பின்னர், 18 கி.மீ வேகமாக குறைந்தது.
Also Read : நெருங்கும் புயல்… சென்னைக்கு அதி கனமழை அலர்ட்… வெதர்மேன் முக்கிய தகவல்!
அதன்பிறகு 13 கி.மீ வேகமாக மேலும் குறைந்தது. நேற்று மணிக்கு 2 கி.மீ வேகத்தில் தான் நகர்ந்தது. இதனால் தமிழக கரையை நெருங்குவது மிகவும் தாமதமானது. அத்துடன் தமிழகத்தில் கனமழை தொடங்குவதும் தாமதப்பட்டது. இருந்தாலும், மேக கூட்டத்தின் விளைவாக ஒருசில இடங்களில் தூரல் மழை பெய்தது. இதனால் புயலாக உருவெடுக்காது என்று வானிலை மையம் கூறியது.