போலீசாரை துரத்தியடித்த பழங்குடியின மக்கள் – தெலங்கானாவில் பரபரப்பு
தெலங்கானாவில் பழங்குடியினர்களுக்கு ஏற்பட்ட நிலம் தொடர்பான தகராறில் சமரசம் செய்ய வந்த போலீசாரை துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில், சத்துப்பள்ளி மண்டலம், புக்கபாடு கிராமத்தின் புறநகர் பகுதியான சந்திராயபாலம் கிராமத்தில் பழங்குடியினர்கள் இரு தரப்பினரிடையே தரிசு நிலம் தொடர்பாக இன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சத்துப்பள்ளி போலீசார் பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க அங்கு வந்தனர். இரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சி நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையின்போது, ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் தடிகளை கொண்டு போலீசாரை தாக்கினர். தொடர்ந்து வனப்பகுதியில் இருந்து பெரிய கம்புகளை கொண்டு வந்து இன்ஸ்பெக்டர் மற்றும் உடன் வந்த போலீசாரை மற்றொரு பழங்குடியினரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.
இதனால் போலீசார் அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்ற நிலையில் பழங்குடியினர் அவர்களை தாக்கி விரட்டியடித்தனர். போலீசார் கிராம மக்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தனர். இதில் சில போலீசார் காயம் அடைந்தனர்.