Exclusive: ஆசிரியர்களாகும் மாணவர்கள்.. அசத்தும் கோட்டையூர் அரசு உதவிபெறும் பள்ளி!
Kottaiyur Sanathana Dharma Vidhyalaya: நீங்கள் தினமும் பயன்படுத்தும் சமூக வலைதளப்பக்கத்தில் மாணவ, மாணவியர்கள் பல்வேறு விதமான வார்த்தை விளையாட்டுக்கள், புதிர்கள் சொல்லும் வீடியோக்களை பார்த்திருக்கலாம். அப்படியான கல்வியை புதுமையாக கற்கும் அரசு உதவி பெறும் பள்ளியை பற்றி நாம் காண்போம்.
கல்வி என்பது அளிக்க முடியாத செல்வம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட கல்வியை புதுமையாக புகுத்தும் போது அது பல தலைமுறைக்கும் சென்று சேரும். தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த சமூகத்தில் சமூக வலைதளங்களில் வளர்ச்சி என்பது அபரிமிதமானது. இத்தகைய சமூக வலைதளங்களை கல்விக்காக பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் நீங்கள் தினமும் பயன்படுத்தும் சமூக வலைதளப்பக்கத்தில் மாணவ, மாணவியர்கள் பல்வேறு விதமான வார்த்தை விளையாட்டுக்கள், புதிர்கள் சொல்லும் வீடியோக்களை பார்த்திருக்கலாம்.
அந்த கணம் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரின் உதடுகளிலும் புன்னகை வந்து செல்லும். அப்படியான கல்வியை புதுமையாக கற்கும் அரசு உதவி பெறும் பள்ளியை பற்றி நாம் காண்போம். இந்த பள்ளியில் மாணவ, மாணவியர்களின் இந்த முயற்சிக்கு ஒரு ஆசிரியை தான் காரணமாக உள்ளார்.
அவர் பெயர் மேகலா பிரகாஷ். இடைநிலை ஆசிரியையான அவர் சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் பகுதியில் செயல்பட்டு வரும் சனாதன தர்ம வித்யாலயா உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் மெய்யும் என்ற இணையப்பக்கத்தில் தான் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். கல்வியின் இந்த புதிய முயற்சியின் பின்னணி குறித்து TV9 தமிழுக்காக பிரத்யேகமாக பல தகவல்களை தெரிவித்தார். அதனைப் பற்றி நாம் காணலாம்.
- உயிரும் மெய்யும் சமூக வலைத்தளப்பக்கம் பற்றி சொல்லுங்க?
நான் வேலை செய்யும் பள்ளியில் உள்ள என்னுடைய குழந்தைகள் வைத்து தான் இந்த வீடியோவை எடுத்து வெளியிடுகிறேன். கடந்த ஆண்டு நான் தான் இந்த சேனலை தொடங்கினேன். என்னுடைய மாணவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. என்னுடைய பள்ளி மாணவர்கள் பாடுவது, டான்ஸ் ஆடுவது என திறமைகளை கொண்டிருக்கிறார்கள். அதனை வெளியே கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். முதலில் யூட்யூப் சேனல் தொடங்கி இப்போது மாணவர்களை வைத்து வீடியோ பதிவிடுகிறேன்.
- இந்த முயற்சிக்கு வரவேற்பு எப்படி இருக்கு?
உண்மையிலேயே பெரிய சப்போர்ட் கிடைத்துள்ளது. இதை நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. குறைந்த காலத்திலேயே ரொம்ப பெரிய அளவுக்கு ரீச் ஆனதை எங்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய இந்த முயற்சிக்கு பள்ளி தரப்பில் எந்தவித தடையும் சொல்லவில்லை.மாணவர்களின் திறமை வெளியே தெரிந்தால் ஓகே தான் என உற்சாகப்படுத்தினார்கள். இந்த வீடியோவைப் பார்த்து விட்டு கேரளாவில் இருந்து ஒரு பெண் அவரின் பள்ளியில் என்னை சேர வேண்டும் என மெயில் அனுப்பியிருந்தார்கள். ஆனால் என்னால் செல்ல முடியாத சூழல் இருந்ததை சொல்லி முடிந்த உதவிகளை செய்வதாக சொன்னேன்.
- உங்களின் முயற்சிக்கு இணையவாசிகள் ஆதரவு எப்படி இருக்கு?
சொல்லப்போனால் பசங்க காட்டுற ஆர்வம் நான் வீடியோ பதிவிட தொடங்கிய பிறகு அதிகரித்து விட்டது. மாணவர்களிடம் நல்ல மாற்றம் தெரிந்தது. நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அவர்களுக்கு பிடித்த மாதிரி வீடியோ போட தொடங்கினேன். இந்த வீடியோக்கள் மக்களுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. சப்போர்ட் பண்றாங்க. சில நேரங்களில் வீடியோவுக்கு நெகட்டிவான கமெண்டுகளும் வரும். ஆனால் நான் பதிலளிக்கும் முன்னரே மற்றவர்கள் பதிலளித்து விடுகிறார்கள். எதிர்ப்பு வருகிறதென்றால் வளர்கிறோம் என்று தானே அர்த்தம்.
- இந்த ஐடியா எங்க இருந்து வந்தது?
கடந்த வருடம் நான் 2ஆம் வகுப்புக்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தேன். அதில் ஒரு மாணவி சாமி பாட்டு நன்றாக பாடினாள். அவளை வீடியோ எடுத்து பள்ளியில் பெற்றோர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டோம். அதன்பிறகு தான் மக்களுக்கு மாணவர்களின் திறமை தெரிய வேண்டும் என நினைத்தோம். அதன்பிறகு அனைத்து மாணவர்களும் நாங்கள் வருகிறோம் என ஆர்வம் காட்ட தொடங்கியது, எனக்கும் அதீத ஆர்வம் தொற்றிக் கொண்டது. வீடியோக்களும் வர தொடங்கியது. பெற்றோர்கள் தொடங்கி எல்லாருடைய சப்போர்டும் கிடைத்ததால் தான் இந்த வளர்ச்சி சாத்தியமானது.
- பள்ளி பற்றியும், வீடியோ எடுப்பதன் பின்னணியும் என்ன?
என்னுடைய பள்ளி காரைக்குடியில் அமைந்துள்ளது. வீடாக இருந்ததை தான் பள்ளியாக மாற்றியிருக்கிறார்கள். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இங்கு செயல்பட்டு வருகிறது. வீடியோ எடுக்கும் இடமானது மாணவர்கள் சாப்பிடவும், மற்ற தனித்திறன்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பள்ளி நேரம் முடிந்த பிறகு தான் இந்த வீடியோக்கள் எடுப்பேன். முழுக்க முழுக்க அனைத்தும் நான் தான் தயார் செய்வேன்.இதற்கான ஐடியாக்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் கொடுப்பார்கள். என் பையன், பொண்ணு இன்னைக்கு ஏன் வீடியோவில் வரலைன்னு செல்லமா சண்டை போடுவாங்க. அதனால் முடிந்தவரை எல்லாரும் வருமாறு வீடியோ எடுக்க முயற்சிப்பேன்.
- சமூக வலைத்தளங்கள் எந்த அளவுக்கு கைகொடுக்கிறது?
அவை கல்விக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். முன்னாடி நாம படிக்கிற காலத்தில் எல்லாம் இந்த மாதிரியான ஆப்ஷன் நமக்கு இல்லாமல் இருந்தது. அதனால் நிறைய பேரின் திறமைகள் வெளியில் வராமல் இருந்தது. சமூக வலைத்தளங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாக உள்ளது. மாணவர்களும் கல்வி சம்பந்தமான சந்தேகங்களுக்கு வீடியோக்கள் கிடைக்கிறது. ரொம்ப உதவியாக உள்ளது.
- பள்ளியைத் தாண்டி மாணவர்களின் திறமைகள் வெளியே தெரிகிறதா?
மாணவர்களின் திறமையைப் பார்த்து விட்டு பள்ளி தரப்பில் மற்ற போட்டிகளில் பங்கேற்க அனுப்புகிறோம். பெற்றோர்கள் அவர்கள் தரப்பில் திறமையை வெளிக்கொணர உதவுகிறார்கள். எங்கள் பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. இங்கு இருக்கும் வரை முடிந்தளவு திறமைகளை வெளிக்கொண்டு வந்து விடுகிறோம். அதன்பிறகு பெற்றோர்களிடம் அறிவுறுத்தி என்ன உதவி வேண்டுமோ செய்வோம். இந்த வேலைக்கு வந்ததை கடவுள் கொடுத்த வாய்ப்பாக நினைத்து பெருமைப்படுகிறேன்.
- உங்களைப் போன்று இன்னும் சிலர் முயற்சித்து வீடியோ வெளியிடுகிறார்களே?
அப்படிப்பட்ட வீடியோக்களைப் பார்த்தால் நான் லைக் செய்து விடுவேன். எந்த பசங்க செய்தால் என்ன? அவர்களும் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது நல்லது தான்!