TVK Party: “பொய்.. பொய்” அதிமுகவுடன் கூட்டணியா? தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
த.வெ.க : அதிமுகவுடன் கூட்டணி என்ற தகவல் முற்றிலும் தவறு என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி என்ற தகவல் முற்றிலும் தவறு என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
அதிமுகவுடன் கூட்டணியா?
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது” என்றார்.
மேலும், ”இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.
Also Read : அரசு பேருந்துகளில் டிக்கெட் புக் பண்ணுறீங்களா? வெளியான முக்கிய அறிவிப்பு!
“முற்றிலும் தவறானது”
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.
எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மைகயில் நடிகர் விஜய் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அதில் அவர் பேசிய பேச்சுகளும், வெளியிட்ட கொள்கைகளும் தமிழக அரசியலில் களத்தில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் குறிப்பிட்டார். அதிலும் திமுகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இப்படி திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்த விஜய், அதிமுகவை விஜய் விமர்ச்சிக்கவில்லை. இதனால் பலரும் பல கேள்விகள் எழுப்பினர்.
Also Read : விளக்கம் கொடுத்த கஸ்தூரி.. வெளியான புதிய வீடியோ! – இணையத்தில் வைரல்!
அதிமுக வாக்குகளை குறிவைக்கும் நோக்கில் அதிமுகவை விஜய் விமர்சிக்காமல் தவிர்த்திருக்கலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டது. மேலும், வரும் 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக விமர்சிக்காமல் இருந்தாரா என்று பல கேள்விகள் எழுந்தது. இதற்கு தற்போது தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதில், அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறானது என்றும் இதுபோன்ற பொய் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால் எந்த நேரத்திலும் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.