”2026-ல் இலக்கை அடைவோம்” – தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய்..
மாநாட்டிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடந்ததற்காக தொண்டர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். அதில் இனி விமர்சனங்கள் தீவிரமாக இருக்கும் என்றும், அதனை மனதில் ஏற்றிக் கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2026 ஆண்டில் இலக்கை நிச்சயம் அடைவோம் என தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருக்கும் வி சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். மேலும் இந்த மாநாட்டில் கட்சி தலைவர் விஜய், கட்சியின் கொள்கை மற்றும் கொடி குறித்து விளக்கமளித்தார். அதோடு கூட்டணி ஆட்சி பற்றியும் தீர்மானங்கள் பற்றிய உரையும் ஆற்றினார். இந்த மாநாட்டிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடந்ததற்காக தொண்டர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். அதில் இனி விமர்சனங்கள் தீவிரமாக இருக்கும் என்றும், அதனை மனதில் ஏற்றிக் கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2026 ஆண்டில் இலக்கை நிச்சயம் அடைவோம் என தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நன்றி தெரிவித்த கட்சி தலைவர் விஜய்:
அதில், “ அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. நம் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
மாநாட்டில், நாம் அனைவரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி. கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி.
எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி.
மேலும் படிக்க: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..
எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது. உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன? நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.
இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரையும் எண்ணி மனம் நெகிழ்கிறேன். உங்களை என் தோழர்களாக, தூய குடும்ப உறவுகளாகப் பெற்றது என் வாழ்நாள் வரம். வழியெங்கும் வசந்தத்தை விதைக்கிற வைரநெஞ்சங்கள் நீங்கள். நம் மக்களோடு சேர்த்து, உங்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம்.
விமர்சனங்களை கடந்து செல்ல வேண்டும்:
நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.
அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் ‘தீவிர அரசியல் செய்தலாக இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி தகுயான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர்.
2026 -ல் இலக்கை அடைவோம்:
ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம். வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன. நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம்” என குறிப்பிட்டுள்ளார்.