TVK Party: 2026ல் விஜய் களமிறங்கும் சட்டமன்ற தொகுதி.. வெளியான அறிவிப்பால் மகிழ்ச்சி!
Thalapathy Vijay: அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அவர் திமுகவை அரசியல் ரீதியாக எதிரி என மறைமுகமாக தெரிவித்தார். அதேபோல் பாஜகவை கொள்கை ரீதியாக எதிரி என விமர்சித்தார்.
தமிழக வெற்றிக் கழகம்: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் தலைவரான விஜய் போட்டியிடும் தொகுதி குறித்த வெளியான தகவல் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட தலைவர் நா.ப.சிவா தலைமை வகித்தார். இந்த கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கறிஞர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதேசமயம் இந்த ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.
அவர்களுக்கு கட்சித் துண்டுகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளிடையே தர்மபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா பேசினார். அப்போது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் த.வெ.க., சார்பில் அக்கட்சித் தலைவர் விஜய் போட்டியிடுவார் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பை கட்சியினர் பெரும் கரகோஷத்துடன் வரவேற்றனர்.
Also Read: Kasthuri: விளக்கம் கொடுத்த கஸ்தூரி.. வெளியான புதிய வீடியோ! – இணையத்தில் வைரல்!
தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைவர் சிவா வெளியிட்டுள்ள இந்த தகவலானது தருமபுரி மாவட்டத்தில் உள்ள மற்ற கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மற்ற கட்சி நிர்வாகிகளும் தற்பொழுது தருமபுரி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்க தொடங்கியுள்ளனர். அதேசமயம் விஜய் நாகப்பட்டினம் தொகுதியிலும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தொகுதி ரீதியாக கட்சி தொண்டர்கள் மூலம் ஒரு ரகசிய சர்வே எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே உள்ளதால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் ஏற்கனவே பணிகளை தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினும் கள ஆய்வில் பிஸியாக உள்ளார். மக்களின் நலத்திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா என்பதை மாவட்ட ரீதியாக சென்று ஆய்வு செய்கிறார். இப்படியான நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக த.வெ.க. கட்சி வாக்கு சதவிகிதத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உண்டாகும் என பலரும் கணித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம்
கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி தனது கட்சியின் செயல்பாடுகள் இருக்கும் என அதிரடியாக அறிவித்த விஜய் ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். இதன் பின்னர் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அவர் திமுகவை அரசியல் ரீதியாக எதிரி என மறைமுகமாக தெரிவித்தார். அதேபோல் பாஜகவை கொள்கை ரீதியாக எதிரி என விமர்சித்தார். தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை மையப்படுத்தி தனது கட்சி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக விஜய் அறிவித்தார்.
Also Read: Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?
இந்த நிலையில் விஜய்க்கு எதிராக அரசியல் ரீதியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அவரை தாறுமாறாக விமர்சித்தார். இதற்கிடையில் மாநாட்டைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர்கள் இடையே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் தனிமனித தாக்குதலில் ஈடுபடக் கூடாது என நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் விஜய் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
மேலும் கட்சியில் ரசிகர்களாக இருந்தவர்கள் மட்டும்தான் தற்போது தொண்டர்களாக உள்ளனர். அதனால் வாக்களிக்க தகுதியுடைய இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கட்சியில் உறுப்பினர்களாக இணைக்கும் வண்ணம் களப்பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. யாரேனும் நம் மீது விமர்சனம் வைத்தால் உணர்ச்சிவசப்படாமல் கண்ணியமான பதிலை கொடுக்க வேண்டும் என்றும். மற்ற கட்சியினர் பேசுகிறார்கள் என்பதால் நாமும் அப்படியே இருக்க வேண்டாம் எனவும் விஜய் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன