எமனாக மாறிய பார்பிக்யூ சிக்கன்.. பறிபோன இரண்டு உயிர்.. திடுக் காரணம்!
கொடைக்கானலில் பார்பிக்யூ சிக்கன் சாப்பிட்டு இரண்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் சிக்கன் பார்பிக்யூ செய்து சாப்பிட்டுவிட்டு அடுப்பை அணைக்காமல் உறங்கியதால் இந்த விபரீதம் நடந்துள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மது அல்லது பழைய சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்திருக்கலாமா அல்லது வேறு எதும் காரணமாக என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பார்பிக்யூ சிக்கனால் பறிபோன உயிர்: திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தளமாகும். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் வருகை தருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுமார் 4 அல்லது 7 நாட்கள் தங்கி இயற்கை சூழ்ந்த பகுதிகளை கண்டு ரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் மது அருந்துவது, சிக்கன் பார்பிக்யூ சமைத்து சாப்பிடுவது உள்ளிட்ட கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், பார்பிக்யூ சமைக்கும்போது ஏற்பட்ட புகையால் இரண்டு சுற்றுலா பயணிகள் உயிரிந்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நேற்று திருச்சியில் இருந்து ஜெகண்ணன், சிவசங்கர், சிவராஜ், சென்னையைச் சேர்ந்த ஆனந்த பாபு உள்ளிட்ட நான்கு பேரும் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர்.
இரண்டு பேர் உயிரிழப்பு:
இவர்கள் வில்பட்டி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சின்னபள்ளம் செல்லும் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று இரவு மது அருந்தி உள்ளனர். மேலும், பார்பிக்யூ சிக்கனுக்கு மசாலா சேர்த்தும் பார்பிக்யூ சிக்கன் சமைக்கும் அடுப்பினையும் திருச்சியில் இருந்து கொண்டு வந்துள்ளனர். அடுப்பு கரி உள்ளிட்டவகைள் புகையீட்டும் சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலையில் ஜெய கண்ணன், ஆனந்த பாபு ஆகியோர் ஒரே அறையில் தங்கி இருந்த நிலையில், இவருவரும் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளனர். இவர்கள் எழாமல் இருப்பதை கண்ட நண்பர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளனர். ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது இருவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுற்றுலா பயணிகள் தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். இதில் பார்பிக்யூ சிக்கன் சமைத்து அடுப்பை அணைக்காமல் இருந்த நிலையில், எழுந்த புகை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும், மது அல்லது பழைய சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்திருக்கலாமா அல்லது வேறு எதும் காரணமாக என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரணம் என்ன?
இதனை அடுத்து, உயிரிழந்த இருவரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “நிலக்கரி மூலம் பார்பிக்யூ சமைத்து விட்டு அடுப்பை அணைக்காமல் அப்படியே தூங்கி உள்ளனர். பார்பிக்யூவில் இருந்து வெளியான விஷவாயு (Carbon Monoxide) சுவாசிக்கும்போது ரத்தம், நுரையிரலில் கலந்து உயிரிழந்துள்ளனர்.
பார்பிக்யூ செய்யும்போது ஒரு அறைக்குள் வைத்து செய்ய வேண்டாம். ஒரு திறந்த வெளியில் வைத்து சமைக்க வேண்டும். ஒரு அறைக்குள் வைத்து சமைக்கும்போது விஷவாயு (Carbon Monoxide) அந்த குறிப்பிட்ட அறைக்குள் அடைந்து இருப்பதால் அதை நாம் சுவாசிப்போம். இதனால் மரணம் ஏற்படலாம்” என்றனர்.