Rain Update: உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. காத்திருக்கும் கனமழை!
அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு: அந்தமான் கடலில் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மலையானது டிசம்பர் 17ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, ஆகிய இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்காடான தென் மாவட்டங்கள்
கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த நாளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. இதன் காரணமாக தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழையானது தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
இதில் தென் மாவட்டங்கள் என சொல்லப்படும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் கடந்த இரண்டு தினங்களாக விடாமல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிவதால் மறுகால் பாய்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மீட்பு பணிகள் தீவிரம்
இதனால் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாவட்ட நிர்வாகத்தால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் வெள்ளம் தேங்கிய பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்பு படையினர் மூலம் மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு தண்ணீர் போக வழி இல்லாமல் நடைபெற்று இருக்கும் பாதைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வெள்ளத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பணிகளை செய்து வருகிறது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள கடைகள் அனைத்தையும் மூடி வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பாபநாசம் சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அகஸ்தியர் அருவியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. இதன் காரணமாக பாபநாசம் பாபநாதா சுவாமி கோவில் படித்துறையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் அருகே சென்று மக்கள் புகைப்படம் செல்பி எடுக்க குவிந்து வரும் நிலையில் அவர்களை அப்புறப்படுத்தும் பணிகள் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Also Read:Aavin : ஆவினில் அறிமுகமாகிறது புதிய வகை பால்.. எப்போது தெரியுமா?
பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகளும், பள்ளிகளில் நடைபெறும் அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மற்றொரு நாளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை நிலவரம், ஆறுகளுக்கு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்படும் நிவாரண பணிகள் என்ன என்பது பற்றி உடனுக்குடன் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் காவல்துறை தீயணைப்பு துறை மீட்பு படையினர் பாம்பு பிடிப்பவர்கள் என அனைத்து துறைகளின் தொலைபேசி எண்களும் அவசரகால உதவிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 3 வயது யானைக் குட்டி ஒன்று உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.