”காழ்ப்புணர்வால் வன்மம்” திமுகவை விமர்சிக்கிறாரா திருமாவளவன்? அப்செட்டில் ஸ்டாலின்
திருமாவளவன் - விஜய் : திமுகவையும் விமர்சிக்கும் விஜய்யுடம் திருமாவளவன் இணக்கமாக இருந்தால் அது கூட்டணியை பலவீனப்படுத்தும் என திமுக தலைவர்கள் கருதுகின்றனர். எனவே, விஜய்யுடம் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் புத்தக வெளியீட்டை விழாவை மையமாக வைத்து தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது சென்னையில் டிசம்பர் 6ஆம் தேதி புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒரே மேடையில் விஜய், திருமாவளவன்
திருமாவளவனும், விஜய்யும் ஒரே மேடையில் பங்கேற்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், வருகிற சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யுடம் திருமாவளவன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாவளவன் கூட்டணி வேறு, விழாவில் பங்கேற்பது வேறு என்று கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து பலமுறை விளக்கம் கொடுத்தும், அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
ஆனால், திமுகவையும் விமர்சிக்கும் விஜய்யுடம் திருமாவளவன் இணக்கமாக இருந்தால் அது கூட்டணியை பலவீனப்படுத்தும் என திமுக தலைவர்கள் கருதுகின்றனர். எனவே, விஜய்யுடம் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இதனால் திருமாவளவன் விஜய்யுடம் ஒரே மேடையில் கலந்து கொள்ளபோவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. திமுக அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், திருமாவளவன் விஜய்யுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
Also Read : சென்னையில் அதிர்ச்சி.. பிஎம்டபிள்யூ கார் மோதி இளைஞர் பலி.. 100 மீ தூக்கி வீசப்பட்ட கோரம்!
”காழ்ப்புணர்வால் வன்மம்”
இருப்பினும், விஜய்யுடம் திருமாவளவன் கூட்டணி வைப்பதாக தொடர்ந்து பேச்சுக்கள் அடிப்பட்டு வரும் நிலையில், திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ”மக்களோடு தொடர்பில்லாத இவர்களா நம்மை மதிப்பீடு செய்வது? எவர் நம்மை விமர்சிப்பவர்கள் என்பதையறிந்தே நம் எதிர்வினைகள் அமையவேண்டும்.
கொண்ட கொள்கைக்கென தம் வாழ்வைத் தொலைத்தவர்கள், வலியைச் சுமப்பவர்கள், மக்களை நேசிக்கும் மாந்தநேயம் உள்ளவர்கள் செய்யும் விமர்சனங்களை நாம் புறம்தள்ள இயலாது. அவர்கள் கொள்கை அடிப்படையில் நம் எதிரிகள் என்னும் நிலையில், அவர்களின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு.
அது தவிர்க்கமுடியாதது.
ஆனால், எதிலும் உறுதியில்லா உதிரிகளா நமது எதிரிகள்? ஆதாரம் ஏதுமின்றி இவர்கள் பரப்பும் அவதூறுகளா நம்மை அசைக்கும் ஆயுதங்கள் ? காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரைக் கண்டும் காணாமல் கடந்து செல்வோம்.
திமுகவை விமர்சிக்கிறாரா திருமாவளவன்?
காலமெல்லாம் மக்களுக்காகக் கடமையாற்றுவதில் கவனம் குவிப்போம். ஆக்கபூர்வமான விமர்சனங்கள எதிர்கொள்வோம். ஆதாரமில்லாத அவதூறுகளைப் புறம்தள்ளுவோம்” என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் திமுகவை நோக்கி விமர்சனமா என்று கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் விஜய் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அதில் அவர் பேசிய பேச்சுகளும், வெளியிட்ட கொள்கைகளும் தமிழக அரசியலில் களத்தில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
Also Read : மேகவெடிப்பு.. ராமேஸ்வரத்தில் 41 செ.மீ மழை.. கரைபுரளும் வெள்ளம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் குறிப்பிட்டார். அதிலும் திமுகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். மேலும், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்று விஜய் கூறிய கருத்தும் விவாதப்பொருளாக மாறியது.
இதன் மூலம், அவர் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு இப்போதே வலை விரித்துள்ளார் என்ற கருத்தும் அரசியல் அரங்கில் உலாவரத் தொடங்கியது. ஏற்கனவே, திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆட்சி அதிகாரிகள் பங்கு என்று கூறி வருகின்றனர். இதனால் விஜய் வைத்துள்ள குறியில் விசிக கட்சியும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் 2026 தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் சூழலில், கூட்டணிகள் குறித்து இப்போதே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.