திமுக மீதான விமர்சனத்தில் கவலை இல்லை – விசிக தலைவர் திருமாவளவன்..

மாவீரர் நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமாக அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஈழ போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஈகை சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

திமுக மீதான விமர்சனத்தில் கவலை இல்லை - விசிக தலைவர் திருமாவளவன்..

திருமாவளவன்

Published: 

28 Nov 2024 08:09 AM

தெலுங்கு எதிர்ப்பை சொல்லி தமிழ் தேசியம் பேசுவது, தம்மை நம்பும் தமிழர்களை ஏமாற்றும் அரசியல் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். மாவீரர் நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமாக அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஈழ போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஈகை சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ” தமிழ்நாட்டில் திருமாவளவனை ஒரு சாதிக்கான தலைவர் என்று முத்திரை குத்தும் முயற்சிகளுக்கிடையே தமிழர்களுக்கான தலைவன் என்று அடையாளம் கண்டவர் மேதகு பிரபாகரன்.

இன்று பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மேதகு பிரபாகரன் கருத்தியல் ரீதியாகவும் தலைவர்களை அடையாளம் காண கூடியவர். தமிழ்நாட்டில் எல்லோரும் தங்களது அரசியலுக்காக ஈழ விடுதலையை பேசினார்களே தவிர உண்மையை யாரும் மக்களுக்கு சொல்லவில்லை.

ஈழ விடுதலை பிரச்சனைக்கு காரணம் காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்த திமுக, அதன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் என்று சொல்பவர்கள் அர்பர்கள். ஏகாதிபத்ய நாடுகளின் துணை இல்லாமல் ஈழ விடுதலையை பெற முடியாது. வல்லரசு நாடுகளின் துணை இல்லாமல் புதிய நாட்டை உருவாக்க முடியாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரியாமல் வென்றெடுப்போம் வென்றெடுப்போம் தமிழீழம் வென்றெடுப்போம் என்று முழங்குவது பலன் அளிக்காது.

திமுக மீதான விமர்சனத்தில் கவலை இல்லை – திருமா:

திமுக மீதான விமர்சனத்தில் நமக்கு கவலை இல்லை, அவர்கள் மீதான விமர்சனத்தை திமுக பார்த்துக் கொள்ளும். அவர்களுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய அளவிற்கு அவர்கள் பலவீனமாகவும் இல்லை நமக்கு அந்த வேலையும் இல்லை. திராவிடம் தான் ஹிந்தி திணிப்பை எதிர்த்தது, தமிழ் மொழியின் பாதுகாப்பிற்காக போராடியது திராவிடம் தான். அப்படி என்றால் திராவிடம் போராடியது தமிழ் தேசியத்திற்கு எதிராகவா? ஆதரவாகவா? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

மேலும் படிக்க: விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த முடியாது.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

பெரியாரை அன்னியர் என்கிறார்கள். பெரியாரை அடிக்கிறார்கள் என்றால் அடுத்த அடி அம்பேத்கர் மேல் தான் விழும், எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். இது ஒரு மோசமான அரசியல். ஹிந்தி தடுக்கப்படாமல் இருந்திருந்தால் நாம் மோடி வித்தைக்கு மயங்கி இருப்போம், பாஜக இன்று நம்மை ஆட்சி செய்திருக்கும்.

ஈழ விடுதலை முறியடிக்கப்பட்டதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. முதலமைச்சர் பதவி என்பது ஒரு அலங்கார பதவி. ஒரு மாநில முதலமைச்சரால் போரை நிறுத்தும் அளவிற்கு அதிகாரம் உண்டா இல்லையா என்பதை உணராமல் பேசுவது வடிகட்டிய பொய்

ஏன் இந்தியா மட்டும் நினைத்தால் கூட போரை நிறுத்த முடியாது, உலக வல்லரசு நாடுகள் இணைந்து முடிவெடுத்தால் மட்டுமே போரை நிறுத்த முடியும். ஆயுதப் படையாக இருந்த அநுர குமார திசநாயகே வின் ஜேவிபி அமைப்பு ஜனநாயக பாதைக்கு திரும்பி இன்று நாடாளுமன்றத்தில் ஆட்சியை கைபற்றி இருக்கிறது இதேபோன்று விடுதலை புலிகளும் மாற்று யுக்தியை சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும் படிக்க: மாமல்லபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.. கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு

சர்வதேச ஆதரவுகளை பெருக்குவது அவசியம்:

மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் ஒரு சர்வதேச பார்வையோடு அணுக வேண்டும் என்பதை புலிகள் இயக்க ஆதரவு தம்பிகளுக்கு நான் சொல்கிறேன். ஈழத்தை வென்றெடுக்க சர்வதேச நாடுகளின் ஆதரவை பெருக்க வேண்டும்.

வெறுப்பு அரசியலின் வலைகளுக்குள் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும். தெலுங்கு எதிர்ப்பை சொல்லி தமிழ் தேசியம் பேசுவது, தம்மை நம்பும் தமிழர்களை ஏமாற்றும் அரசியல். மொழி உணர்வு வேண்டும் மொழி உரிமை வேண்டும் மொழி பாதுகாப்பு வேண்டும் ஆனால் மொழியை பிடித்து தொங்க கூடாது. ஈழத்தை வென்றெடுக்க சர்வதேச சமூகங்களின் ஆதரவை ஒன்று திரட்ட நாம் ஒருங்கிணைய வேண்டும்” என குறிபிட்டு பேசியுள்ளார்.

கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?
பறக்கும்போது தூங்கும் பறவைகள் என்னென்ன தெரியுமா?
கல்யாணம் கன்ஃபார்ம்... வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோ