Thirumavalavan: அரசியல் களத்தில் விஜய்யால் மாற்றம் நிச்சயம்.. திருமாவளவன் கணிப்பு!
திமுக கூட்டணியை பலவீனப்படுத்த விடாமல் பாதுகாப்பதே இன்றைக்கு இருக்கும் போராட்டமாக நான் பார்க்கிறேன். இதனை திமுகவுக்கு எதிராக நான் சொல்லவில்லை. அதிமுக மற்றும் பாஜக தனியாக நிற்கிறது. பாமக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தவுடன் ஒரு அணியில் சென்று சேர்வதற்கு வாய்ப்பு இல்லை. அவர் தனித்து தான் நின்றாக வேண்டும்.
தொல் திருமாவளவன்: அரசியல் களத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 2வது மிகப்பெரிய சக்தியாக நடிகர் விஜய் இருக்க வாய்ப்புள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கணித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய திருமாவளவனிடம், “2026 ஆம் ஆண்டு அரசியல் களம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “திமுக கூட்டணியை பலவீனப்படுத்த விடாமல் பாதுகாப்பதே இன்றைக்கு இருக்கும் போராட்டமாக நான் பார்க்கிறேன். இதனை திமுகவுக்கு எதிராக நான் சொல்லவில்லை. அதிமுக மற்றும் பாஜக தனியாக நிற்கிறது. பாமக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தவுடன் ஒரு அணியில் சென்று சேர்வதற்கு வாய்ப்பு இல்லை. அவர் தனித்து தான் நின்றாக வேண்டும். நாம் தமிழர் கட்சி ஏற்கனவே தனித்து நிற்பதாக அறிவித்து விட்டார்கள். இந்த மாதிரியான சூழலில் திமுகவை, திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிரணியினர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: Today Panchangam September 27 2024: இன்றைய பஞ்சாங்கம் சொல்லும் நல்ல நேரம் ராகு கால விவரங்கள்..
திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவதில் பல நோக்கங்கள் இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அதிமுகவுக்கான வாக்கு வங்கி சிதறாமல் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எதிர்காலத்தில் அதனை காலி செய்ய முடியும் என நினைக்கிறார்கள். விஜய் வந்த பிறகு அதிமுகவுக்கான வாக்கு பிரியும், குறிப்பாக அக்கட்சியில் உள்ள இளம் தலைமுறையினர் வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறார்கள். ஆனால் திமுகவை பொறுத்தவரை கட்டமைப்பு ரீதியாக வலுவாக இருக்கிறது. அதேபோல் கூட்டணி ரீதியாகவும் வலுவாக இருக்கிறது. இதுதான் எதிரணியினருக்கு மிகப்பெரிய கேள்வி ஆக உள்ளது. மீண்டும் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்துவிட்டால் அதன்பிறகு பாஜகவால் இங்கு எதுவும் செய்ய முடியாது. அதே சமயம் விஜய் அரசியல் களத்தில் இரண்டாவது சக்தியாக வர வாய்ப்புள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ” அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்காது. அதிமுகவில் உள்ள தனி நபர்கள் வேண்டுமானால் அதற்கு சமரசம் ஆகியிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த கட்சியும் கண்டிப்பாக ஆகிருக்காது. ஒருவேளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை ஏற்றுக் கொண்டாலும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு கொடுத்தால் ஒரு திட்டத்தை நம்மால் நிறைவேற்ற முடியாது. விருப்பப்படி ஆட்சி நடத்த முடியாது. மிகப்பெரிய அளவில் பிரச்சனைகள் உண்டாகும் என்ற பயம் இருக்கும்.
இதையும் படிங்க: TVK Vijay: த.வெ.க மாநாடு.. விஜய்க்கு 33 கண்டீஷன் போட்ட விழுப்புரம் போலீஸ்.. என்ன நடக்குப்போகுது?
குறிப்பாக தமிழ்நாடு களம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைக்கு தயாராக இல்லை என நான் நினைக்கிறேன். சொல்லப்போனால் மக்களிடம் இருந்துதான் அந்த கோரிக்கை வரவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கட்சி வைக்கக்கூடிய கோரிக்கை மக்களிடத்தில் இருந்து எழ வேண்டும். நிச்சயம் ஒரு நாள் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்கும் காலம் கனியும்” எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். தொடர்ந்து கட்சியின் கொடி கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தமிழக கட்சி கழகத்தின் தலைமை நிலைய செயலகத்தில் விஜய்யால் அறிமுகம் செய்யப்பட்டது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என செயல்பட்டு வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த மாநாட்டிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் காவல்துறை அனுமதியும் கிடைத்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை உண்டாக்குவார் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.