5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadhav Arjuna: போதும் பா சாமி! ஆதவ் அர்ஜூனா எடுத்த முடிவு.. விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

Viduthalai Chiruthaigal Katchi: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள் என ஆதவ் ஆர்ஜூனா தெரிவித்துள்ளார்.

Aadhav Arjuna: போதும் பா சாமி! ஆதவ் அர்ஜூனா எடுத்த முடிவு.. விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!
ஆதவ் அர்ஜூனா – திருமாவளவன் (Image: Aadhav Arjuna/instagram)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 15 Dec 2024 19:24 PM

விசிகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன்.” என தெரிவித்திருந்தார்.

கட்சியின் வளர்ச்சி:

தொடர்ந்து பேசிய அவர், “சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எளிய மக்கள் குறிப்பாக, ‘சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்’ என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில முக்கிய கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் உங்களுக்கும் எனக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவது எனக்கு பிடிக்கவில்லை.

ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்” என்றார்.

சமத்துவம், சமநீதி:

மேலும் அம்பேத்கர் குறித்து அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஆதவ் அர்ஜூனா, “இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்பையில் ‘சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.

அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்” என தெரிவித்திருந்தார்.

ஆதவ் ஆர்ஜூனா ஏன் விசிகவில் இருந்து விலகப்பட்டார்..?

சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்துகள், ஆளும் திமுக அரசை விமர்சித்து பேசியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பேசிய ஆதவ் அர்ஜூனா, “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும். இங்கு மன்னராட்சி இடமில்லை. 2026 மன்னராட்சி முற்றிலும் ஒழிக்கப்படும்” என்று தெரிவித்தார். இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “சமீப காலமாக விசிகவின் துணைப் பொது செயலாளர் ஆதவ் கட்சியின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுவது செயற்குழுவின் கவனத்திற்கு வந்தது. இது தொடர்பாக 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் பிற முன்னணி தோழர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து எதிர்மறையாகச் செயல்பட்டு வருகிறார்; இத்தகைய நடவடிக்கைகள், மேலோட்டமாகத் தோன்றினாலும், கட்சியின் நலன் மற்றும் அதிகார பலம்; அவர்கள் கட்சி மற்றும் அதன் தலைமையின் நம்பகத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி, கடுமையான பொது விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் அடங்கிய செயற்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.” என தெரிவித்திருந்தார்.

Latest News