TVK Vijay: த.வெ.க மாநாடு.. விஜய்க்கு 33 கண்டீஷன் போட்ட விழுப்புரம் போலீஸ்.. என்ன நடக்குப்போகுது?
த.வெ.க மாநாடு: தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மாநாடு நடத்தவும், அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 5 நாட்களுக்கு முன்பு மனு கொடுத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மாநாடு நடத்தவும், அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 5 நாட்களுக்கு முன்பு மனு கொடுத்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்த விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதோடு, பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, 33 நிபந்தனைகளில் அதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று விழுப்புரம் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
த.வெ.க மாநாட்டிற்கு அனுமதி:
அதன்படி, பார்க்கிங் வசதி, பாதுகாப்பு, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டிற்கு குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.
மேலும், கழிவறைகள், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் மாநாடு நடைபெறும் இடம் சுற்றி மூன்று கிணறுகள் உள்ளதால் அந்த கிணறுகளை மூட வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.
Also Read; தனியாக நின்ற கார்.. உள்ளே 5 பேரின் சடலம்.. கடன் பிரச்சனையால் நடந்த கொடூரம்..
இதனைத் தொடர்ந்து, த.வெ.க முதல் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் இன்று சென்னை பனையூரில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள், தொண்டர்களை அழைத்து வருவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைத்து பணிகளையும் முடிக்க கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு:
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார்.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது.
மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி கேட் படத்தின் வெளியீடு மற்றும் அதன் வெற்றி ஆகியவற்றால் ரசிகர்கள் மட்டுமின்றி தொண்டர்களும் படு குஷீயில் உள்ளனர். கடந்த வாரம் கூட, அண்ணா பிறந்தநாளுக்கு வாழ்த்து, பெரியார் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியது திராவிட சித்தாந்தத்தை கையில் எடுப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
பணிகள் தீவிரம்:
இதன் மூலம், விஜய் என்ன மாதிரியான அரசியலை நோக்கி பயணிக்கப்போகிறார் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தி திட்டமிட்டிருந்த விஜய், அதனை அடுத்த மாதம் 27ஆம் தேதி நடத்த உள்ளார். மாநாட்டிற்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை செய்ய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சுமார் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதில் ஒவ்வொரு குழுவிலும் 12 பேர் வரை இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாட்டில் 50,000 பேர் பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.