பிரதமர் பாராட்டிய மதுரை பெண்.. மூலிகைத்தோட்டம் மூலம் பிரபலம்.. யார் இந்த சுபஸ்ரீ?
ஒவ்வொரு பேரிடர் காலங்களின் போதும் நமது அருகில் இருப்பவர்களில் சிலர் தங்கள் பொறுமையை இழக்காமல் அந்த பேரிடரில் இருந்து பல விஷயங்களை கற்கிறார்கள். அப்படிப்பட்ட நபர்களில் ஒருவர்தான் சுபஸ்ரீ. இவர் தனது முயற்சியின் மூலமாக கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகள் நிறைந்த ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கியுள்ளார். இவர் தமிழ்நாட்டின் மதுரையில் வசித்து வருகிறார்.தொழில் ரீதியாக ஆசிரியையாக இருந்தாலும் மருத்துவ தாவரங்களின் மீது கொண்ட அலாதியான பிரியம் கொண்டவர்.
மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தி வருகிறார். அவர் ஒவ்வொரு மாதம் பேசும் போது சமூகத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் மக்களில் ஒருவர் குறித்த தகவல்களை தெரிவித்து அவர்களை மனதார பாராட்டுவார். அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மதுரை வரிச்சியூர் அருகே வசித்து வரும் ஆசிரியை சுபஸ்ரீ பற்றி பேசினார். அந்நிகழ்ச்சியில் தான் வசிக்கும் இடத்தில் மூலிகை பூங்காவை உருவாக்கி தனக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பை அவர் அளித்து வருவதாக பிரதமர் மோடி பாராட்டினார். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் பிரதமரே பாராட்டிய சுபஸ்ரீ யார் என்பதை அறிந்து கொள்வதில் தான் உள்ளது.
இதையும் படிங்க: Tamilnadu Weather Alert: குமரிக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி.. தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?
பிரதமர் பேசியது என்ன?
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஒவ்வொரு பேரிடர் காலங்களின் போதும் நமது அருகில் இருப்பவர்களில் சிலர் தங்கள் பொறுமையை இழக்காமல் அந்த பேரிடரில் இருந்து பல விஷயங்களை கற்கிறார்கள். அப்படிப்பட்ட நபர்களில் ஒருவர்தான் சுபஸ்ரீ. இவர் தனது முயற்சியின் மூலமாக கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகள் நிறைந்த ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கியுள்ளார். இவர் தமிழ்நாட்டின் மதுரையில் வசித்து வருகிறார். தொழில் ரீதியாக ஆசிரியையாக இருந்தாலும் மருத்துவ தாவரங்களின் மீது கொண்ட அலாதியான பிரியம் 1980 ஆம் ஆண்டுகளிலேயே உருவாகி இதனை தொடங்க வைத்துள்ளது.
ஒருமுறை சுபஸ்ரீயின் தந்தையை விஷ பாம்பு ஒன்று கடித்துள்ளது. அவரது உயிரை காப்பதில் பாரம்பரியமான மூலிகைகள் மற்றும் தாவரங்கள் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. இந்த நிகழ்வு தான் சுபஸ்ரீக்கு பாரம்பரியமான மருத்துவ தாவரங்களைப் பற்றிய தேடுதல் வேட்கையை உண்டாக்கியுள்ளது. அதனால் தான் இன்று அவர் வசிக்கும் மதுரை வரிச்சூரியூர் கிராமத்தில் அமைந்திருக்கும் மூலிகை பூங்காவில் 500க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகை செடிகள் இருக்கிறது.
இவர் இந்த பூங்காவை உருவாக்க மிகத் தீவிரமாக உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தாவரத்தையும் கொண்டு வருவதற்கு இவர் தொலைதூரங்களுக்கு பயணங்கள் மேற்கொண்டிருந்தார். அது தொடர்பான பல அறியப்பட்டாத தகவல்களையும் திரட்டியுள்ளார். மற்றவர்களிடம் மூலிகை பூங்கா அமைப்பதற்கான உதவி கேட்டிருக்கிறார். கொரோனா காலத்தில் கூட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மருத்துவ முறைகளை மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்.
இன்று சுபஸ்ரீ அமைத்துள்ள மூலிகை பூங்காவை காண தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் பலரும் வருகிறார்கள். அனைவருக்கும் மருத்துவ தாவரங்களைப் பற்றிய தகவல்களையும் அதன் பயன்பாடுகளையும் சுபஸ்ரீ விளக்குகிறார். நமது கலாச்சாரத்தின் அங்கமாக விளங்கும் பாரம்பரியத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கும் சுபஸ்ரீயும், அவருடைய மூலிகை பூங்காவும் நமது கடந்த காலத்தை வருங்காலத்தோடு இணைத்துக் கொண்டிருக்கிறது. அவருக்கு நம்முடைய வாழ்த்துக்கள் என தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: Sivakarthikeyan: விஜய் இடத்துக்கு ஆசையா?.. வெளிப்படையாக பதிலளித்த சிவகார்த்திகேயன்!
யார் இந்த சுபஸ்ரீ?
மதுரை மாவட்டம் பூலாங்குளம் பகுதியில் சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் வரிச்சூர் என்ற பகுதியில் 40 சென்ட் கொண்ட இடத்தில் மூலிகை தோட்டத்தை உருவாக்கியுள்ளார். இங்கு அரிய வகை இனங்களான பல மூலிகைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 500க்கும் மேற்பட்ட இனங்கள் இந்த மூலிகை தோட்டத்தை பார்வையிட பல ஊர்களில் இருந்தும் பொதுமக்களும், ஆராய்ச்சி மாணவர்களும் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சுபஸ்ரீ யின் இந்த முயற்சி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் தெரிய வந்துள்ளது. பல இடங்களில் இருந்தும் பிரதமர் மோடியின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சுபஸ்ரீக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது தொடர்பாக ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள சுபஸ்ரீ, “பிரதமர் தன்னைப் பற்றி பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இந்த மூலிகை தோட்டத்தை தனது கணவர் கவனித்து வருவதாகவும், பள்ளி வேலை முடிந்ததும் மாலை மற்றும் விடுமுறை நாட்களில் தான் பாராமரித்து வருகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.