“இது திட்டமிட்ட சூது… சனாதன சூழ்ச்சி” ஒரே மேடையில் திருமாவளவன், விஜய்? விசிக பதில்!

விஜய் - திருமாவளவன்: சென்னையில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இது திட்டமிட்ட சூது... சனாதன சூழ்ச்சி ஒரே மேடையில் திருமாவளவன், விஜய்? விசிக பதில்!

விஜய் - திருமாவளவன் (picture credit: PTI)

Updated On: 

11 Nov 2024 10:53 AM

சென்னையில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது. அதாவது, வட இந்தியாவை சேர்ந்த 38 எழுத்தாளர்கள் சேர்ந்து அம்பேத்கர் பற்றி கட்டுரை எழுதியுள்ளனர். அந்த கட்டுரைகளில் ஒன்றை விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனனும் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை திருமாவளவன் வெளியிட, விஜய் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியது.

ஒரே மேடையில் திருமாவளவன், விஜய்?

இந்த நிகழ்ச்சியில் பங்கேற் விஜய் ஒத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும், அண்மையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் கூறினார். எனவே, விசிக தலைவர் திருமாவளவனை குறிவைத்து பேசுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதற்கு தற்போது விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “திசம்பர் -06, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளன்று “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்னும் நூல்வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அவ்விழாவில் அரசியல் சாயம்பூசி நம்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க சதிதிட்டம் தீட்டுகின்றனர். நமது கூட்டணியின் உறுதித்தன்மையை பரிசோதித்துப் பார்க்கின்றனர்.

தற்போது விஜய் அவர்களின் மாநாட்டு உரை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நாளேடு ஒன்று “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறது”.  இந்த நூல் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றியது என்பதால் அவரது பிறந்தநாளான ஏப்ரல் -14 அல்லது அவரது நினைவு நாளான திசம்பர்-06 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் வெளியிடுவதென தீர்மானிப்பது இயல்பான ஒன்றேயாகும். அதன்படியே, தற்போது திசம்பர் -06 அன்று இந்நிகழ்வை நடத்திட ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Also Read : “கொம்புசீவும் முயற்சி” கூட்டணி மாறுகிறாரா திருமாவளவன்.. பரபரப்பு விளக்கம்!

விளக்கம் அளித்த திருமாவளவன்

இந்நிலையில், கட்சி சார்பற்ற விகடன் பதிப்பகம் ஒருங்கிணைக்கும் ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பதும், நம்மீது சந்தேகத்தை எழுப்பி நமது நம்பகத்தன்மையை நொறுக்கிட முயற்சிப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இது திட்டமிட்ட சூது! சனாதன சூழ்ச்சி! உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை நிலைகுலைய வைக்கும் சதிநிறைந்த முயற்சி” என்றார்.

தொடர்ந்து, ”விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே ஒரு கூட்டணியில் இடம் பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறபோது, நாம் இன்னொரு கூட்டணிக்குப் போவதற்கோ அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ என்ன தேவை எழுந்துள்ளது?

மக்கள்நலன் மற்றும் நாட்டுநலன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தொலைநோக்கோடு திமுக உள்ளிட்ட தோழமைகளோடு கைகோர்த்து நாமே உருவாக்கிய “மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி” ஆகியவற்றை நாம் ஏன் சிதறடிக்க வேண்டும்?

இது திட்டமிட்ட சூது.. சனாதன சூழ்ச்சி

இது நம்மை மிக மிகப் பலவீனமானவர்களாகக் மதிப்பீடு செய்வோரின் நஞ்சு நிறைந்த மிகவும் கேடான ஒரு மனோநிலையாகும். மாற்றுக் கருத்து அல்லது முரண்பாடான நிலைப்பாடு கொண்ட இன்னொரு கட்சியின் தலைவரோடு ஒரு நூல்வெளியீட்டு விழாவில் பங்பேற்பதாலேயே நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல்?

இவ்வாறு நம்மைப் பற்றி இழித்தும் குறைத்தும் மதிப்பீடு செய்வதற்கு அவர்கள் கையாளும் அளவுகோள் தான் என்ன? ஆதாயம் கருதி அங்குமிங்கும் அல்லாடும் அற்ப அரசியல் செய்யும் சராசரி பேர்வழிகள் என்று நம்மைக் கருதுகிறார்களா?

திட்டமிட்டே நம்மீது அய்யத்தை எழுப்புவோர் திமுகவுக்கு மட்டுமல்ல; விசிகவுக்கும் நமது கூட்டணிக்கும் பகையானவர்களேயாகும். அத்தகைய நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக்கூடாது. தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்” என்றார்.

Also Read : தமிழ்நாடு திரும்பும் அண்ணாமலை.. பாஜகவின் அடுத்த கட்ட திட்டம் என்ன?

மேலும், “த.வெ.க தலைவரும் நடிகருமான திரு. விஜய் அவர்களோடு நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர். அவர் அண்மையில் அவரது மாநாட்டில் ஆற்றிய உரையில் தம்மோடு இணையவிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்தார்.

நடிகர் விஜய் அவர்கள் எத்தகைய எதிர்பார்ப்புடன் இதனை அறிவித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், “ஆட்சியதிகாரத்தில் பங்கு” என்பது ‘விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கை தானே. எனவே, நாமும் சேர்ந்து உருவாக்கியது தான் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி. அதனை தக்க வைப்பதும் பாதுகாப்பதும் நமக்குமான கடமைகளாகும். அதனைச் சிதறடிப்பதற்கோ சிதைப்பதற்கோ நாம் எவ்வாறு இடமளிக்க இயலும்?” என்றார்.

 

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்