5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tiruvannamalai: மகாதீபம் காண திருட்டுத்தனமாக சென்று மாட்டிக்கொண்ட பெண்!

தீபமலையில் பக்தர்கள் யாரும் ஏறி செல்ல முடியாத வண்ணம் அதன் வழித்தடத்தில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த கடுமையான பாதுகாப்பையும் மீறி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இருவர் மகாதீபம் காண மலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ஏறி சென்றுள்ளனர்.

Tiruvannamalai: மகாதீபம் காண திருட்டுத்தனமாக சென்று மாட்டிக்கொண்ட பெண்!
மீட்கப்பட்ட அண்ணபூர்ணா (Photo: X)
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Dec 2024 06:23 AM

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாதீபம் காண தடையை மீறி சென்று வழி தெரியாமல் மாட்டிக் கொண்ட பெண்ணை வனத்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக திகழும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் – உண்ணாமலையம்மன் கோயிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக மகா கார்த்திகை தினத்தன்று கோயிலின் பின்புறம் உள்ள தீப மலையில் 2668 அடி உயரமுள்ள உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். கிட்டத்தட்ட 11 நாட்கள் எரியும் இந்த மகாதீபம் காண லட்சக்கணக்கான பக்தர்கள்  உள்ளூர் முதல் உலகம் வரை வருகை தருவது வழக்கம். ஆனால் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்தால் திருவண்ணாமலையில் உள்ள தீப மலையில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

Also ReadD Gukesh: சென்னை வந்ததும் குவிந்த ரசிகர்கள்.. குகேஷை மேடையில் கவுரவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

இதில் வ.உ.சி நகர் 11வது தெருவில் பாறைகள் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஏழு பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதனால் டிசம்பர் 13ஆம் தேதி திட்டமிட்டபடி திருவண்ணாமலை தீபத்திருவிழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் டிசம்பர் 4ஆம் தேதி தீபத்திருவிழாவுக்கான கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து மகாதீபம் அன்று பக்தர்கள் மலையேற அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் 2 நாட்கள் தீபமலையை ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.

அதே சமயம் சட்டப்பேரவையில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “மக்களுக்கு அனுமதி கிடைக்காவிட்டாலும் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் கட்டாயம் எரியும்” என உறுதியளித்திருந்தார். அதன்படி கடந்த 13 ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்ட அன்று பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. அதேசமயம் பத்திரிக்கையாளர்கள், கோயில் பணியாளர்கள், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மலையேற அனுமதி அளிக்கப்பட்டது.

Also Read: Viral Video : நிஜ வாழ்க்கை Subway Surfer இதுதானா.. ரயிலின் மேற்கூரையில் படுத்துக்கொண்டு பயணித்த நபர்!

கண்காணிப்பை மீறி உள்ளே சென்ற இருவர்

அதேசமயம் தீபமலையில் பக்தர்கள் யாரும் ஏறி செல்ல முடியாத வண்ணம் அதன் வழித்தடத்தில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த கடுமையான பாதுகாப்பையும் மீறி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இருவர் மகாதீபம் காண மலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ஏறி சென்றுள்ளனர். ஒருகட்டத்தில் இவர்கள் வழி தெரியாமல் தனியாக பிரிந்துள்ளனர். இதில் ஆண் நபர் மலையிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்ட நிலையில் வழி தெரியாமல் பெண் பக்தர் சிக்கிக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் வனத்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வனக்காப்பாளர் ராஜேஷ் மற்றும் தன்னார்வலர்கள் மகா தீப மலையில் 16ஆம் தேதி காலையில் ஏறி சென்றனர். ஆண் நபர் தெரிவித்த வழித்தடங்களைச் சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து பார்த்தாலும் அந்த பெண் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை இதனை தொடர்ந்து சுமார் 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மகாதீப மலையிலிருந்து தெற்கு திசை பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவில் அந்தப் பெண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை அணுகியபோது 2 நாட்கள் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் மிகவும் சோர்ந்து போய் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வனக்காப்பாளர் ரமேஷ் இரவு 8 மணி அளவில் அந்த பெண்ணை முதுகில் சுமந்து கொண்டு கீழே இறங்கி வந்தார். இதனை தொடர்ந்து மிகவும் சோர்வாக இருந்த பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணின் பெயர் அன்னபூர்ணா என்பதும். ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வசிப்பவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தடையை மீறி எப்படி தீபமலையில் அவர் ஏறி சென்றார் என்று விசாரித்து வரும் வனத்துறையினர்,  சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News