Vaigai Express: ரயிலின் படியில் அமர்ந்த இளைஞர்.. நொடிப்பொழுதில் பறிபோன உயிர் - Tamil News | youth falling in vaigai express train and died CCTV footage released | TV9 Tamil

Vaigai Express: ரயிலின் படியில் அமர்ந்த இளைஞர்.. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்

Published: 

03 Oct 2024 14:56 PM

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பல்லவன், வைகை ஆகிய ரயில்கள் முழுக்க உட்கார்ந்து செல்லும் இருக்கைகள் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவில்லா பெட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பெறும் பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் நின்றுக்கொண்டே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை அங்கிருக்கும் டிக்கெட் பரிசோதகர்களும் கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

Vaigai Express: ரயிலின் படியில் அமர்ந்த இளைஞர்.. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்

பாலமுருகன் ரயிலில் இருந்து விழும் காட்சி

Follow Us On

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டில் இருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். 24 வயதான இவர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று மதியம் 1.40 மணிக்கு புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். முன்பதிவில்லா பெட்டிக்கான டிக்கெட் வாங்கியதாக கூறப்படும் அவர் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார். இந்த ரயில் சைதாப்பேட்டை ரயில் கடக்கும்போது இளைஞரின் கால் அங்கிருந்த நடைமேடையின் மீது வேகமாக இடித்துள்ளது. இதில் தடுமாறி கீழே விழுந்த பாலமுருகன் அந்த நடைமேடையில் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டு தண்டவாளத்தில் விழுந்ததோடு மட்டுமல்லாமல் தான் பயணித்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

Also Read: Tamilnadu Weather Alert: அடுத்த 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

இதனைக் கண்டு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.  உடனடியாக அந்த ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து  மாம்பலம் ரயில்வே காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்த வந்த ரயில்வே போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாம்பலம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலமுருகன் ரயிலில் இருந்து தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகளின் படி, ஏசி பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்திருக்கும் அவர் தடுமாறி விழுவது போல இருக்கிறது. இதன்மூலம் முன்பதிவு இல்லா பெட்டியில் பயணிப்பதற்கான டிக்கெட் வாங்கிக் கொண்டு அவர் ஏசி பெட்டியில் பயணித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பல்லவன், வைகை ஆகிய ரயில்கள் முழுக்க உட்கார்ந்து செல்லும் இருக்கைகள் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவில்லா பெட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பெறும் பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் நின்றுக்கொண்டே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை அங்கிருக்கும் டிக்கெட் பரிசோதகர்களும் கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் சாதாரண டிக்கெட் வாங்கிக்கொண்டு முன்பதிவு பெட்டிகளின் கழிவறைப்பகுதியிலும் சிலர் அமர்ந்துக் கொண்டு பயணிக்கின்றனர். சில நேரங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் அபராத தொகை பெற்றுக்கொண்டு இவர்களை பயணம் செய்ய அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படியில் உட்கார்ந்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என தெற்கு ரயில்வே தனது சமூக வலைத்தளப் பக்கம் மூலம் ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Also Read: Home Tips: தினமும் துணிகளை அயர்ன் செய்யும் தொல்லையா? இப்படி செய்தால் இந்த கஷ்டம் இருக்காது!

ரயிலில் விழுந்து மாணவன் தற்கொலை

இதனிடையே அண்ணா பல்கலைக்கழகம் விடுதியில் தங்கி இருந்த மதன் மித்ரன் என்ற மாணவனை கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி முதல் காணவில்லை என காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவனின் புகைப்படம் அனைத்து காவல் நிலையத்துக்கும் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இப்படியான நிலையில் கிண்டி மற்றும் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் சடலம் கிடப்பதாக மாம்பலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில் உயிரிழந்தது காணாமல் போன அண்ணா பல்கலைக்கழக மாணவன் மதன் மித்ரன் என்பது தெரியவந்தது. அவரது உடல் மீட்கப்பட்ட இடத்தில் கடிதம் ஒன்றும் கிடந்தது. அதில் கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவி ஒருவருடன் நட்பாக பழகி வந்ததாகவும் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் சண்டை உருவானதாகவும் எழுதப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த மதன் மித்ரன் தற்கொலை முடிவை தேடிக் கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
Exit mobile version