பணம் மோசடி உஷார்.. செல்போனை தேடிவரும் கும்பல்.. எப்படி ஏமாற்றுவார்கள் தெரியுமா?
Cyber Crime Awareness : நேரில் வந்து திருடும் கும்பல்கள் எல்லாம் தற்போது செல்போனை குறி வைத்து டிஜிட்டல் முறையில் திருடுகின்றன. ஒவ்வொரு நாளும் வித்தியாசம் வித்தியாசமாக டிஜிட்டல் திருட்டு நடைபெற்று வருகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை அலேக்காக தூக்கிச் செல்ல ஒரு மோசடி கூட்டமே மறைமுகமாக இயங்கி வருகிறது.
செல்போனுக்குள் உலகம் வந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது வெறும் தொலைதொடர்புக்கானது மட்டுமில்லாமல் ஆகிவிட்டது. வங்கி பரிவர்த்தனைகள், போன்பே, கூகுள்பே போன்ற பண பரிவர்த்தனைகள், ஷேர் மார்கெட் விவரங்கள், வங்கி செயலிகள் என மொத்த வரவு செலவுகளுமே நம் கைப்பேசிக்குள்தான் இருக்கின்றன. கையில் பணமில்லாமல் செல்போனை வைத்துக்கொண்டு ஒரு ஷாப்பிங் சென்று வந்துவிடலாம் என்ற நிலை தற்போது வந்துவிட்டது. இப்படி இந்த டிஜிட்டல் உலகம் நமக்கு வேலையை மிக எளிதாக சுருக்கிக்கொடுத்துவிட்டது. அதே நேரத்தில் இந்த டிஜிட்டல் உலகத்தால் பல பிரச்னைகளும் உண்டாகிவிட்டன.
திருட்டு கும்பலும் டிஜிட்டலில் இறங்கிவிட்டன. அப்படியான கும்பலிடம் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டுமென்றால் நாமும் விழிப்புடன் இருக்க வேண்டும். அந்த வகையில் சில டிஜிட்டல் மோசடி குறித்து தெரிந்துகொள்ளலாம்.
டிஜிட்டல் கைது என வீடியோகால் மூலம் மோசடி
மக்களின் பயத்தை மூலதனமாக கொண்டு பணம் பறிக்கும் கும்பல் பயன்படுத்தும் மோசடியே டிஜிட்டல் கைது. எதாவது சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டிருப்பதுபோல போலீசார் பேசுவது போல அல்லது அமலாக்கத்துறை பேசுவது போல சிலர் பேசுவார்கள். வேண்டுமென்றால் அதே கெட்டப்பில் வீடியோகால் கூட வருவார்கள். வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பணம் அனுப்புமாறு கேட்பார்கள். அல்லது குற்றத்துக்கான தண்டனை என அபராதம் கேட்பது போல பணம் கேட்பார்கள். அப்படியான விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். எந்த போன் அழைப்பு வந்தாலும் பணம் அனுப்பக் கூடாது.
Also Read : வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பறிபோன ரூ.1.94 கோடி.. அதிர்ச்சி சம்பவம்!
மிக குறைந்த வட்டி மானியத்துடன் லோன்
லோன் தருவதாக பணம் பறிப்பது வழக்கமான மோசடி முறை. பண தேவை அனைவருக்குமே இருக்குமென்பதை தெரிந்துகொள்ளும் மோசடி பேர்வழிகள் மிக குறைந்த வட்டி, அல்லது வட்டியே இல்லாமல் லோன் என ஆசை வார்த்தைகளை கூறி நம் தகவல்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்வார்கள்.
வங்கி ரிவார்ட் பாய்ண்ட்ஸ்
போன்கால், எஸ் எம் எஸ் தாண்டி நேரடியாக நம்முடைய வாட்ஸ் அப்பில் தேடி வரும் மோசடி வங்கி ரிவார்ட் பாய்ண்ட்ஸ். எஸ்பிஐ, கனரா போன்ற எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வங்கி பெயரை குறிப்பிட்டு ரிவார்ட் பாய்ண்ட் வேண்டுமென்றால் லிங்கை கிளிக் செய்க என குறிப்பிடுவார்கள். அந்த லிங்கை தொட்டால் நம் செல்போன் ஹேக் செய்யப்பட்டு பணம் அபேசாகும்.
அன்பளிப்பு மோசடி
சோஷியல் மீடியா மூலம் விரிக்கப்படும் வலையே அன்பளிப்பு மோசடி. இன்ஸ்டா, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகி நட்பு வளர்த்து மிகவும் உரிமையான நபர்களாக மாறுவார்கள். அன்பளிப்பு அனுப்பி இருக்கிறேன். ஏர்போர்ட்டில் சிக்கி இருக்கிறது போன்ற பொய்யை கூறி பணம் அனுப்ப சொல்வார்கள். இந்த மாதிரியான மோசடியில் இருந்து தூரமாக இருக்க வேண்டும். அறிமுகமில்லாத நபர்களிடம் நெருக்கமாக பேசுவதை தவிர்க்க வேண்டும்
Also Read : மாணவர் டூ முதியவர் வரை.. பல கோடிகள் இழப்பு.. ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’யில் தப்பிப்பது எப்படி?
ஆன்லைன் முதலீடு, வீட்டில் இருந்தே வேலை
வேலை தேடுபவர்களை குறி வைத்து நடத்தப்படும் மோசடியே வீட்டில் இருந்தே சம்பாரிக்கலாம், வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் போன்ற மோசடி அழைப்புகள். ஒரு குறிப்பிட்ட வேலையை சொல்லி நம்மிடமே முன் தொகை பெறுவார்கள். சில நாட்களில் நாம் கொடுத்த தொகையுடன் எஸ்கேப் ஆவார்கள். இது மாதிரியான வேலை குறித்த மோசடிகளிலும் உஷாராக இருக்க வேண்டும்