Annamalai Kuppusamy
தமிழக பாஜகவின் தலைவராக இருப்பவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. இவர் கரூர் மாவட்டம் சொக்கம்பட்டியில் 1984ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார். கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்த பின், லக்னோ ஐஐஎம்மில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். ஐபிஎஸ் பணியில் சேர ஆர்வம் கொண்டிருந்த அவர், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, கர்நாடகா பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் சேர்ந்தார். ஷிமோகாவில் பயிற்சி ஏஎஸ்பியாக காவல்துறையில் தனது பணியை தொடங்கிய அண்ணாமலை, பதவிய உயர்வு பெற்று சிக்மகளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். பின்னர், பெங்களூருவில் காவல் துணை ஆணையராக பணியாற்றி மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். இதன்பின் அரசியலில் களமிறங்க முடிவு செய்த அண்ணாமலை, 2019ல் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தமிழ்நாடு பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரானதும், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.