Border Gavaskar Trophy
பார்டர் – கவாஸ்கர் டிராபி
பார்டர் – கவாஸ்கர் டிராபி என்பது இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விளையாடப்படும் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். இந்த தொடருக்கு முன்னாள் கேப்டன்களாக ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் அணி கோப்பையை பெறும். இரு அணிகளும் தொடரை டிரா செய்தால், கடந்த தொடரில் கோப்பையை வென்ற அணி டிராபியை தக்கவைத்து கொள்ளும். பார்டர்-கவாஸ்கர் டிராபி முதன்முறையாக 1996-97 ஆம் ஆண்டு விளையாடப்பட்டது. பார்டர் – கவாஸ்கர் டிராபி இரு அணிகளுக்கு இடையே இதுவரை 16 முறை விளையாடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக இந்திய அணி 10 முறையும், ஆஸ்திரேலிய அணி 5 முறையும் தொடரை வென்றது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு தொடர் சமனில் முடிவடைந்துள்ளது. பார்டர் – கவாஸ்கர் டிராபியில் கடைசி 4 தொடர்களில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும், 2018 – 19ல் இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும், 2020-21 ல் இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும், கடந்த 2023ல் இந்தியா தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கிலும் தோற்கடித்தது.