Dhanush
1983-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி இயக்குநர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் கடைக்குட்டி மகனாக பிறந்தவர் நடிகர் தனுஷ். வெங்கடேஷ் பிரபுவாக பிறந்த இவரை நடிகர் தனுஷ் என மாற்றியது இவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் தான். 2002-ம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாத் துறைக்கு வந்து தற்போது ஹாலிவுட் வரை சென்றடைந்தது தனுஷின் அயராத உழைப்பைக் காட்டுகிறது. தனுஷின் சினிமா வாழ்க்கைக்கு அண்ணன் செல்வராகவன் ஒரு ஆரம்ப புள்ளி என்றால் இயக்குநர் வெற்றிமாறன் தனுஷின் சினிமா வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான ’பொல்லாதவன்’ படம் தனுஷின் சினிமா வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தனுஷ் நடிப்பு மட்டும் இன்றி, பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவராக சினிமாவில் வலம் வருகிறார்.