Edappadi K Palaniswami
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்