Heart attack
மாரடைப்பு
மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு வரும் என்பதை கடந்து, நவீன வாழ்க்கை முறை, நடைபயிற்சி இல்லாமை, மது அருந்துதல், புகை பிடித்தல், துரித உணவுகள் காரணமாக இளைஞர்களையும் தாக்குகிறது. இதன் காரணமாக, 40 முதல் 60 வயதுடையவர்கள் மட்டுமின்றி 20 முதல் 24 வயது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் இறக்கின்றனர் என்றும், அதில் 5ல் 4 இறப்புகள் மாரடைப்பால் மட்டுமே ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.
பெரும்பாலானோர் மாரடைப்பு என்பது திடீரென வரும் என்று நினைக்கிறார்கள். இது பாதி தவறு, பாதி உண்மை. இதய தசையில் இரத்த ஓட்டம் குறையும் போது அல்லது நிறுத்தப்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும் மற்றும் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், முழு உடலிலும் மாற்றங்கள் நிகழ்ந்து பல்வேறு அறிகுறிகள் தோன்றும். அதாவது, பெரும்பாலான மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சு வலி, மார்பின் நடுவில் அல்லது இடது பக்கத்தில் கடுமையான வலி, அழுத்தம், அழுத்தும் உணர்வு ஏற்படலாம். இதுவே மாரடைப்பின் பொதுவான அறிகுறி என்று கூறப்படுகிறது.