Ilayaraja
இந்திய சினிமா இசையின் அடையாளமாக பார்க்கப்படும் இளையராஜா, தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். ‘அன்னக்கிளி’ என்னும் தமிழ்ப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் வெற்றிகரமான இசையமைப்பாளராகிவிட்டார். முதல் ஐந்தாண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் இசையமைத்து ஹிட்டடித்தவர் என்ற பெருமையும் இளையராஜாவையே சேரும். இந்திய திரையுலகில் சுமார் அரைநூற்றாண்டாக தனது இசை என்னும் ஆட்சியை நடத்தும் இளையராஜா தமிழ் ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படுகிறார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது திரை வாழ்க்கையில் 1000 திரைப்படங்களுக்கு மேல், 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் மேஸ்ட்ரோ இளையராஜா. மேலும் பத்ம பூஷன், மற்றும் பத்ம விபூஷன் மற்றும் சங்கீத நாடக அகாடமிக் விருது என பல விருதுகளை வென்றுள்ளார் இளையராஜா. இவர் தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைத்தும், இசை கச்சேரிகள் நடத்தியும் வருகிறார்