Kanniyakumari
இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டம். தமிழ்நாட்டின் சென்னைக்கு அடுத்தபடியாக பிற மாநில இந்தியர்களால் அதிகளவில் உச்சரிக்கப்படும் பெயர் கன்னியாகுமரி. அரசியல்வாதிகள் தொடங்கி பலரும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்றே சொல்கிறார்கள். கோடிக்கணக்கான மக்களால் உச்சரிக்கப்படும் குமரி மாவட்டம் கேரள கலாச்சாரத்துடனும், ஒருபக்கம் தமிழ்நாட்டின் கலாச்சாரத்துடனும் ஒன்றிருக்கிறது. வங்கக் கடல், அரபிக் கடல் இந்திய பெருங்கடல் என முக்கடல் சங்கமுக்கும் முக்கிய தளமான கன்னியாகுமரிக்கு லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலாவுக்காக வந்து செல்வார்கள். இந்திய அளவில் அதிகளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக கன்னியாகுமரி திகழ்கிறது. அதன்படி, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், குமரி கோயில், குமரி கடற்கரை என இங்கு காண வேண்டிய இடங்கள் ஏராளம். ரப்பர் மற்றும் காற்றாலை உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது கன்னியாகுமரி மாவட்டம். கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மாநகராட்சியும், 4 நகராட்சிகளையும் கொண்டுள்ளது. மேலும், ஒரு மக்களவை தொகுதியும், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என 6 சட்டப்பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கியது.