Lok Sabha Election 2024
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக இந்த தேர்தல் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே மூன்று கட்ட தேர்தலில் மக்களவையில் மொத்தமுள்ள 535 தொகுதிகளில் 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன. மே 13ம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்னும் மே 20, மே 25, ஜூன் 1ம் தேதி ஆகிய தேதிகளில் மேலும் 3 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39 தொகுதிகளுக்கான மக்களவைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும். தமிழக கட்சிகளைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இந்த தேர்தலை சந்தித்தன. ஆளும் கட்சியான திமுக INDIA கூட்டணியில் அங்கம் வகித்துள்ளது. ஏற்கெனவே கூட்டணியில் இருந்த அதிமுக – பாஜக பிரிந்து தனித்தனியே தேர்தலை சந்தித்தன. அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் கட்சியான தேமுதிக இடம்பெற்றது. பாஜகவுடன் பாமக, ஜிகே வாசன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தது. தமிழக தேர்தலை பொறுத்தவரை, ஏப்ரல் 21 பிற்பகல் அறிவிப்பின்படி, இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.