Seeman
1966ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் அரணையூர் கிராமத்தில் பிறந்த சீமான், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே நிறைவு செய்தார். சீமானின் தந்தை தீவிரமான காங்கிரஸ் தொண்டர். இதனால் சீமானுக்கு கல்லூரி காலத்தில் இருந்தே திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவராக இருந்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, திரைத்துறையிலும் ஆர்வமாக இருந்த சீமான், 1991ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இதன்பிறகு, வீரநடை, தம்பி, வாழ்த்துகள், பாஞ்சாளங்குறிச்சி, ஆகிய படங்களையும் இயக்கியும், மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம், மகிழ்ச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தும் தமிழ் திரையிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். என்னதான், திரைத்துறையில் இருந்தாலும், திராவிட கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும், சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். இதன்பிறகு 2008ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கு இடையே நடந்த போர் சூழலில், பிரபாகரனை சந்தித்து பேசினார். இந்த போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக தீவிரமாக பேசினார். இது தான் அவர் கட்சி தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. 2009ல் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கினார் சீமான். அது, அடுத்த ஆண்டே அரசியல் கட்சியாக உருவெடுத்தது.