‘டாஸ்மாக் செல்வேன், நான் குடிகாரன் இல்லை’: மது பிரியரின் வைரல் பேட்டி
TASMAC Extra charge allegation: டாஸ்மாக்கில் மீண்டும் ரூ.10 ஏற்றப்பட்டுள்ளது என மது பிரியர் ஒருவர் புகார் அளித்ததுடன், பேட்டி அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது. பேட்டியின் போது, இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக மது பிரியர் கூறினார்.
“நான் ஒன்றும் குடிகாரன் கிடையாது; டாஸ்மாக்கில் மீண்டும் ரூ.10 அதிகமாக வசூலிக்கப்படுகிறது” என மாவட்ட ஆட்சியரிடம் மது பிரியர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதற்கு தன்னிடம் ஜி-பே ஆதாரம் இருப்பதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார். கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தச் சர்ச்சை பூதாகரமாக வெடித்த நிலையில், இதனை தவிர்க்கும் பொருட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி, வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வழியாக பேமெண்ட் செய்யலாம் என்றார். இதற்கிடையில் மது பிரியர் ஒருவரின் பேட்டி மீண்டும் வைரலாகிவருகிறது.
மது பிரியர் வைரல் பேட்டி
இது தொடர்பாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், “என் பெயர் தங்கவேல். நான் மதுவுக்கு ஒன்றும் அடிமை கிடையாது. மருந்து போல் தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோட்டில் உள்ள ஓர் டாஸ்மாக் மதுக் கடையில் மது வாங்கினேன்.
குறிப்பிட்ட பிராண்ட் ஒன்றை கேட்டு நான் மது வாங்கினேன். அந்தப் பிராண்டின் விலை ரூ.250தான். என்னிடம் ரூ.10 அதிகமாக கேட்டார்கள். நான் வேண்டும் என்றால் வழக்கம் போல் ரூ.5 தருகிறேன் என்றேன். ஆனால் அவர்கள் என்னிடம் ரூ.10 கூடுதலாக வாங்கிக் கொண்டார்கள்.
இதையும் படிங்க : அந்தரங்க வீடியோ லீக்.. பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம் இம்ஷா ரெஹ்மானுக்கு சிக்கல்!
ஜி- பே ஆதாரம்
இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. நான் இந்தப் பணத்தை ஜி-பே வழியாக செலுத்தியுள்ளேன். இது பற்றி கேட்டதற்கு உடைந்த பாட்டில்கள் மற்றும் இதர செலவுகளுக்கு இதனை உபயோகிப்பதாக கூறுகின்றனர்.
இந்த விவகாரத்தில் நீதி வேண்டும். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது. அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய பின்பும் இதுபோன்ற தவறுகள் தொடர்கின்றன ” என்றார்.
பிளாக்கில் வாங்கினீர்களா?
இதையடுத்து செய்தியாளர் நீங்க மது பாட்டிலை பிளாக்கில் (கள்ளச் சந்தை) வாங்கினீர்களா? எனக் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த மது பிரியர், “சம்பந்தப்பட்ட கடையின் பெயரை கூறி, நான் இங்குதான் வாங்கினேன். பிளாக்கில் வாங்க முடியாது. அங்கு இதை விட பணம் அதிகமாக கொடுக்க வேண்டும்” என்றார்.
டாஸ்மாக்கில் ரூ.10 கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக மது பிரியர் ஒருவர் புகார் அளித்த சம்பவம் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வைரலாகும், ‘பாம்புகளின் காதலி’.. யார் இந்த அஜிதா?