மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிக்கிறதா? காட்டுத் தீப் போல் பரவும் செய்தி.. உண்மை என்ன?
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 62 ஆக உயர்த்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் ஓர் பதிவு வைரலாகிவருகிறது. இந்தப் பதிவின் உண்மை என்ன? மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய ஓய்வூதிய வயது என்ன?
மத்திய அரசு, தங்கள் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்தப் பதிவை கண்மூடித்தனமாக நம்பும் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், இது பாரிய கவனம் பெறுகிறது. உண்மையில், மத்திய அரசு தனது ஊழியர்களின் ஓய்வூதிய வயதை உயர்த்தியுள்ளதா? இந்தப் பதிவின் உண்மை என்ன? மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய ஓய்வூதிய வயது என்ன? இது குறித்து பார்க்கலாம்.
ஓய்வு வயதை உயர்த்த காரணம் – வைரல்
நாடு முழுக்க வைரலான அந்தச் செய்தியில், ஏப்ரல் 1, 2025 முதல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 62 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில், “நாட்டில் அதிகரித்துள்ளது மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்களின் தேவை உள்ளது. மேலும், அதிகரித்து வரும் ஓய்வூதியச் சுமையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது நிர்வாகச் சீர்திருத்தங்களை மேம்படுத்த உதவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வங்கிக் கணக்கில் பணம் இல்லை.. மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு பாதிக்குமா?
பி.ஐ.பி. உண்மை சரிபார்ப்புக் குழு மறுப்பு
இது குறித்து பி.ஐ.பி.யின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், “இந்தத் தகவல் போலியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகளை நீங்கள் கண்டால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் சரிபார்க் வாசகர்கள் சம்பந்தப்பட்ட செய்தியை https://factcheck.pib.gov.in க்கு அனுப்பலாம்.
மேலும், +918799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும், pibfactcheck@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சந்தேகத்துக்கு இடமான செய்தியை அனுப்பலாம்” எனத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை
முன்னதாக, மத்திய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நவ.17ஆம் தேதியன்று ஒரு மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர்.
அப்போது, “பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீட்டெடுக்க வேண்டும் மற்றும் தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஓபிஎஸ் கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அரசு அதனை மீண்டும் கொண்டுவருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப கொண்டுவர யோசிக்கிறது எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8% வரை வட்டி: இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!