Flight Accident : நேபாள விமான விபத்து.. விமானம் விழுந்து நொறுங்கியதில் 18 பயணிகள் பலி!
Nepal | நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம், சில நொடிகளிலே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்துக்குள்ளானது. இன்று காலை நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து போக்காராவுக்கு விமானம் புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விமான விபத்து : நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம், சில நொடிகளிலே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்துக்குள்ளானது. இன்று காலை நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து போக்காராவுக்கு விமானம் புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானத்தை விமானி இயக்கிய போது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த 18 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் விமானி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி தீ பிடித்த விமானம்
விபத்துக்குள்ளான விமானம் செளர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதை அடுத்து தீ பிடித்து எரிந்துள்ளது. அதனை விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர். இருப்பினும் பயணிகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. தற்போது அங்கு தியணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : Train Accidents: தொடர்ந்து நடக்கும் ரயில் விபத்துகள்.. இந்தியாவில் மட்டும் இவ்வளவு நடப்பதற்கு காரணம் என்ன?
நேபாளத்தில் தொடரும் விமான விபத்துக்கள்
நேபாளத்தில் விமான விபத்துக்கள் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள போக்காரா விமான நிலையத்தில், விமானம் தரை இறங்க முயற்சித்த போது கீழே விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது. அதே போல தற்போது விமானம் புறப்பட தயாராக இருந்த போது கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : வேட்டி அணிந்து சென்ற விவசாயிக்கு மாலில் அனுமதி மறுப்பு.. உடனடியாக பறந்த உத்தரவு.. அடுத்து நடந்தது என்ன?
தொடரும் மீட்பு பணிகள் – தற்காலிகமாக மூடப்பட்ட காத்மண்டு விமான நிலையம்
விமான விபத்து நடந்த காத்மண்டு விமான நிலையத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.