US Presidential Election: “உண்மையான நண்பர்” சட்டென போன் போட்ட மோடி.. புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்!
Donald Trump : உலகம் முழுவதும் பிரதமர் மோடியை நேசிக்கிறது. இந்தியா ஒரு அற்புதமான நாடு. பிரதமர் மோடி அற்புதமான மனிதர். அவரையும் இந்தியாவையும் உண்மையான நண்பராக கருதுகிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். பிரதமர் மோடி, டிரம்பை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்ந்து நடந்து முடிந்துள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபராக உள்ளார். தற்போது வரை 296 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார் டிரம்ப். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் 224 வாக்குகளை பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளார்.
டிரம்புடன் தொலைப்பேசியில் பேசிய பிரதமர் மோடி
டொனால்டு டிரம்ப் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடுகளில் ஒன்றான இந்தியா டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி, டிரம்பை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, வரலாற்று சிறப்பு வெற்றி பெற்றுளீர்கள். உங்களுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “எனது நண்பர், அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுடன் ஒரு சிறந்த உரையாடலை மேற்கொண்டார்.
அவரது அற்புதமான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்தியா-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த மீண்டும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன். தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் பல துறைகளை மேம்படுத்த ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்றார்.
Had a great conversation with my friend, President @realDonaldTrump, congratulating him on his spectacular victory. Looking forward to working closely together once again to further strengthen India-US relations across technology, defence, energy, space and several other sectors.
— Narendra Modi (@narendramodi) November 6, 2024
மேலும் டிரம்ப் பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசுகையில், “உலகம் முழுவதும் பிரதமர் மோடியை நேசிக்கிறது. இந்தியா ஒரு அற்புதமான நாடு. பிரதமர் மோடி அற்புதமான மனிதர். அவரையும் இந்தியாவையும் உண்மையான நண்பராக கருதுகிறேன். உலகத் தலைவர்களின் பிரதமர் மோடியுடன் தான் எனது முதல் உரையாடல் அமைந்துவிட்டது.” என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read : பட்டையை கிளப்பிய ட்ரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றி!
இந்தியா அமெரிக்க உறவு:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக உள்ள நிலையில், இது இந்தியாவிற்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வணிகம், ராணுவ கூட்டாண்மை, தூதரக உறவு, குடியேற்றம் போன்றவை பெரும் சவாலாக இந்தியாவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதில் குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது, எச்-1 விசா மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். இது அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு அடிப்படையாக உள்ளது. இருநாடுகளுக்கு இடையே ஜோ பைடன் ஆட்சியின்போதே பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து ராணுவ ஆயுதங்கள், பரிமாற்றம் என ராணுவ உறவு இந்தியா அமெரிக்கா இடையே மேம்படும் என்று கூறப்படுகிறது.
Also Read : ”இருண்ட காலத்தை நோக்கி நகரும் அமெரிக்கா” தேர்தல் தோல்விக்கு பின் கமலா ஹாரிஸ் எச்சரிக்கை!
இந்தியா-அமெரிக்க உறவுகளை பாதிக்கும் ஒரு பகுதி வர்த்தகம். கடந்த மாதம், டிரம்ப் வெளிநாட்டு பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. டிரம்பின் வரி விதிகளை அமல்படுத்தினால், 2028ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திகள் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும், டிரம்பின் வர்த்தக கொள்கைகளால் இந்தியாவின் இறக்குமதி விலை உயரலாம். இதனால் பணவீக்கம் அதிகரித்து, வட்டி விகிதத்தை குறைக்க முடியாத சூழல் உருவாகலாம். இதனால் நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.