அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. ஜோ பைடன் திட்டவட்டம்!
Joe Biden | வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தற்போதைய அதிபர் ஜோ பைடன் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். வயது மூப்பு காரணமாக தடுமாற்றமாக காணப்படும் ஜோ பைடன் அதிபர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் : அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்று தற்போதைய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதை அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் டொனால்ட் டிரம்புடனான முதல் நேரடி விவாதத்தில் பைடன் தடுமாறிய நிலையில், அவர் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று அவருக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதன் காரணமாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் மாற்றாப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தானே அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் அறிக்கை
இது குறித்து ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்த தேர்தலில் நான் இறுதி வரை நின்று களம் காண்பேன். நாம் அனைவரும் இணைந்து வெற்றி பெறுவோம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் டொனால்ட் டிரம்பை தோற்கடிக்க எனக்கும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸூக்கும் சிறிய தொகையை நன்கொடையாக அளித்து உதவுவது மட்டும்தான்” என்று அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுமாறும் ஜோ பைடன்
சமீப காலமாக ஜோ பைடனின் வயது மூப்பு காரணமாக அவரது பேச்சிலும், செயலிலும் தடுமாற்றங்கள் காணப்படுகின்றன. ஆட்களே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பது, மேடையில் பேசாமல் நீண்ட நேரம் யோசிப்பது, மேடையில் ஏற தடுமாறுவது, சம்மந்தமே இல்லாமல் பேசுவது என அவரது பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரலாகி வந்தன. இதனை காரணமாக கொண்டு ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட கூடாது என்று சொந்த கட்சியினறே வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமன்றி ஜோ பைடனுக்கு பதிலாக இந்திய வம்சாவளியான துணை அதிபர், கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பிரிட்டனில் ஆட்சியை பிடிக்கும் தொழிலாளர் கட்சி.. யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்?
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜோ பைடன்
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தானே மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். தடுமாற்றத்தின் காரணமாக அவ்வப்போது விவாதத்திற்கு உள்ளாவது, டிரம்புக்கு எதிரான முதல் விவாதத்தில் தடுமாறியது என பல தனக்கு எதிராக பல சவால்கள் இருப்பினும் ஜோ பைடன், டொனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவது அங்கு அரசியல் களத்தை சற்று சூடு பிடிக்க செய்துள்ளது.