Sri Lanka Election Results: இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல்முறை.. 2வது விருப்பு வாக்கு முடிவுக்கு காத்திருக்கும் அதிபர் பதவி!
Sri Lanka elections result 2024: வாக்கு எண்ணிக்கை நேற்று ஆரம்பித்தது முதலே அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணும்போது அனுரகுமார 50 சதவீத வாக்குகளை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது, சஜித் பிரேமதாச இன்று மதியம் வரை 33.1 சதவீத வாக்குகளை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், அனுரகுமார திஸாநாயக்கவை முதல் சுற்றில் வெற்றி பெறவிடாமல் தடுத்தார். இதன் காரணமாக, இரண்டாவது சுற்று நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இலங்கை வரலாற்றில் வாக்கு எண்ணிக்கை இரண்டாவது சுற்றுக்கு வருவது இதுவே முதல் முறை.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெறவில்லை. இதன் காரணமாக, யார் அடுத்த இலங்கையில் அதிபர் என்பதை தீர்மானிக்க முடியாததால் இலங்கை தேர்தல் ஆணையம் இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அதிக வாக்குகளை பெற்றிருந்த போதிலும், அவர்களால் 50 சதவீதத்தை தாண்ட முடியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழவின் தலைவர் எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதையடுத்து இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த அதிபர் என்று அறிவிக்கப்படும்.
யார் அதிக வாக்குகள்..?
முதலாம் சுற்று வாக்களிப்பில் 39.5% வாக்குகள் பதிவாகியதில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த அனுரகுமார திஸாநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அதேநேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 34% வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.
17% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த தற்போதை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க உட்பட மீதமுள்ள அனைத்து வேட்பாளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க விருப்பு வாக்குகளை பயன்படுத்தி இரண்டாவது சுற்று எண்ணும் தொடங்கும்.
இதுவே முதல் முறை:
வாக்கு எண்ணிக்கை நேற்று ஆரம்பித்தது முதலே அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணும்போது அனுரகுமார 50 சதவீத வாக்குகளை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது, சஜித் பிரேமதாச இன்று மதியம் வரை 33.1 சதவீத வாக்குகளை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், அனுரகுமார திஸாநாயக்கவை முதல் சுற்றில் வெற்றி பெறவிடாமல் தடுத்தார். இதன் காரணமாக, இரண்டாவது சுற்று நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இலங்கை வரலாற்றில் வாக்கு எண்ணிக்கை இரண்டாவது சுற்றுக்கு வருவது இதுவே முதல் முறை.
கடந்த செப்டம்பர் 21ம் தேதியான நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக இலங்கையை சேர்ந்த மக்கள் வாக்களித்தனர். இலங்கையில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடுக்கு பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அதிபர் தேர்தலில் 75 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமை பயன்படுத்தி ஓட்டை பதிவு செய்தனர். 2019 நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 83 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது விருப்பத்தேர்வு என்றால் என்ன..?
எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லை என்றால், குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கப்படுவார். இந்த வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் வாக்காளர்களின் இரண்டாவது விருப்பத்தின் அடிப்படையில் மீதமுள்ள 2 வேட்பாளர்களிடையே விநியோகிக்கப்படும்.
குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை வெளியேற்றி, ஒரு வேட்பாளர் பெரும்பான்மை பெறும் வரை வாக்குகளை மாற்றும் இந்த செயல்முறை தொடர்கிறது.
இலங்கை அதிபர் தேர்தல் எப்படி நடைபெறுகிறது..?
இலங்கையில், வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களை விருப்பப்படி தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு வேட்பாளர் அறுதிப் பெரும்பான்மை பெற்றால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இல்லையெனில், இரண்டாவது சுற்று எண்ணிக்கை தொடங்கும். இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பங்களின் வாக்குகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.
மொத்த வாக்குகள் மற்றும் விருப்பு வாக்குகளை எண்ணி புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் எந்தவொரு தேர்தலும் இதுவரை இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையை எட்டியதில்லை, ஏனெனில் இதுவரை இலங்கை அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளர் எப்போதும் 50 சதவீத வாக்குகளை பெற்று முதல் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்று வந்தனர்.