Srilanka: இலங்கை பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரிய.. அமைச்சரவையில் 2 தமிழர்களுக்கு இடம்!
இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியவற்றை அதிபரான அனுர குமார திசநாயக்க இன்று அறிவித்தார். அதன்படி கடந்த செப்டம்பரில் இலங்கையில் இடைக்கால பிரதமராக பதவி வகித்த ஹரிணி அமரசூரிய இன்று மீண்டும் புதிய பிரதமராக பதவியேற்று கொண்டார்.இந்த புதிய அமைச்சரவையில் 2 தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அமைச்சரவை: இலங்கை நாட்டின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் இரண்டு தமிழர்களுக்கு இடம் கிடைத்துள்ளது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த செப்டம்பர் 21ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க அபார வெற்றி பெற்றார். இதனையடுத்து செப்டம்பர் 23ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்றார். அப்போது அவரது தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் பெரும்பான்மையின் நிரூபிக்க வேண்டிய நெருக்கடி அனுர குமார திசநாயக்கவுக்கு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல்
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்த அவர் நவம்பர் 14ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் அமைப்பதற்கான தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி கடந்த நவம்பர் 14ஆம் தேதி இலங்கையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த 196 இடங்களுக்கு மட்டும் கட்சி சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை என மொத்தம் 8, 821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை மொத்தம் 13,314 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இதன் முடிவில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பெரும்பான்மை நிரூபிக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் எதிர்பாராத அளவுக்கு அக்கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது.
புதிய அமைச்சரவை
இதனை தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியவற்றை அதிபரான அனுர குமார திசநாயக்க இன்று அறிவித்தார். அதன்படி கடந்த செப்டம்பரில் இலங்கையில் இடைக்கால பிரதமராக பதவி வகித்த ஹரிணி அமரசூரிய இன்று மீண்டும் புதிய பிரதமராக பதவியேற்று கொண்டார். அவருக்கு கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அதிபரான அனுர குமார திசநாயக்க வசம் நிதி, பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி விவகார துறை அமைச்சராக விஜித ஹேரத் மற்றும் உள்ளாட்சி அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் வேளாண்மை அமைச்சராக லால் காந்த, வீட்டு வசதித்துறை அமைச்சராக அனுரா கருணா திலக ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
இப்படியான நிலையில் இந்த புதிய அமைச்சரவையில் 2 தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர். அதன்படி மகளிர் நலத்துறை அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாத்தாறைப் பகுதியைச் சேர்ந்தவர். அதேபோல் கடல் வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் என்பவர் பதவியேற்றுள்ளார். இன்று இவர்கள் தமிழ் மொழியில் சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
அதிபர் வேண்டுகோள்
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அதிபர் அனுர குமார திசநாயக்க, “நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரிவினை அரசியல் தேவை இல்லை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அவர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து துறைகளிலும் நல்லாட்சி நடைபெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
யார் இந்த ஹரிணி அமரசூரிய?
இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள ஹரிணி அமரசூரிய 1970 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கொழும்பில் பிறந்தவர். அங்குள்ள பிஷப் கல்லூரியில் அடிப்படை கல்வியை பயின்ற அவர், டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். பின்னர் ஆஸ்திரேலியாவின் மெர்க்குரி பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். இதனை தொடர்ந்து பிரிட்டனின் எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்காட்லாந்தின் குயின் மார்க்கெட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இதன் பிறகு இலங்கையில் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ஹரிணி பணியாற்றினார். அரசியல் ஆர்வம் காரணமாக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியில் இணைந்த அவர் 2011 ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் ராஜபக்சவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தினார். கடந்த 2020 ஆம் ஆண்டில் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலானதேசிய மக்கள் கூட்டணி சார்பில் எம்பி.யாக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.