US Election Results: அமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் முன்னிலை!

US Election Results: அமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் முன்னிலை!

கோப்பு புகைப்படம்

Updated On: 

06 Nov 2024 13:07 PM

அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகமே எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருவது எதிர்பாராத திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. தற்போது அமெரிக்கா அதிபராக உள்ள ஜோ பைடன் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்யும் பொருட்டு தேர்தல் இந்திய நேரப்படி நவம்பர் 5 ஆம் தேதியான நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று காலை 5.30 மணி வரை மிக அமைதியான முறையில் நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் விறுவிறுப்பாக நடந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்கை செலுத்தினர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

Also Read: X Platform : இனி எக்ஸ் தளத்தில் இந்த தொல்லை இல்லை.. Block ஆப்ஷன் விரைவில் அறிமுகம்!

அந்த வகையில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி  சார்பில் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் அதிபர் வேட்பாளர்களாக களம் கண்டனர். இதில் வாக்கு எண்ணிக்கையில் அலபாமா,ஆர்கன்சாஸ்,புளோரிடா, இந்தியானா, கென்டக்கி, லூசியானா, மிசூரி,மிசிசிப்பி, மொன்டானா, வடக்கு டகோட்டா,நெப்ராஸ்கா,ஓஹியோ,ஓக்லஹோமா,தென் கரோலினா,தெற்கு டகோட்டா, டென்னசி, டெக்சாஸ்,உட்டா,மேற்கு வர்ஜீனியா,வயோமிங் ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் காலை 9 மணி நிலவரப்படி வெற்றிப் பெற்றுள்ளார்.

அதேபோல் கமலா ஹாரிஸ் கொலராடோ,கனெக்டிகட்,டெலவேர், இல்லினாய்ஸ்,மாசசூசெட்ஸ்,மேரிலாந்து, நியூ ஜெர்சி, நியூயார்க், ரோட் தீவு,வெர்மான்ட் ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் கமலா ஹாரிஸூக்கு ஆதரவாக இருந்த நிலையில் திடீர் திருப்பமாக டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பரபரப்பாக நடந்த வாக்குப்பதிவு 

மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்த நிலையில் சில இடங்களில் கனமழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் அனைவரும் ஜனநாயக கடமையாற்றினர். இப்படியான நிலையில் வாக்குப்பதிவு நடந்துக் கொண்டிருக்கும்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு எதிராக ஆன்லைனில் கொலை மிரட்டல் விடுத்ததாக பென்சில்வேனியாவில்  ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Also Read: US President Election: அமெரிக்க அதிபர் தேர்தல்.. எப்படி வாக்குப்பதிவு நடக்கும் தெரியுமா?

அதேபோல் தேர்தல் பணியாளரான நிக்கோலஸ் விம்பிஷ் ஜோன்ஸ் என்ற நபர் கவுண்டி தேர்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒருவருடன் நடைபெற்ற மோதல் தான் இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் மோதலில் ஈடுபட்ட நபரை போலீசர் தேடி வருகின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு மத்தியில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்பட்டு புதிய அதிபர் யார் என்பது தெரிய வரும். புதிதாக தேர்வு செய்யப்பட்டும் நபர் அமெரிக்காவின் அதிபராக 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உள்ள சட்ட நடைமுறைப்படி முன்னரே வாக்களிக்கும் முறையானது உள்ளது. இதனைப் பயன்படுத்தி 7 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்குப்பதிவுக்கு முன்பே வாக்களித்து விட்டனர். துணை அதிபர் கமலா ஹாரிஸ், அதிபர் ஜோ பைடன் ஆகியோரும் மின்னஞ்சல் மூலமாக வாக்குச் செலுத்தினர். அமெரிக்காவைப் பொறுத்தவரை ட்ரம்ப் ஆதரவாளர்கள் தங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆனால் முடிவுகள் மாறலாம் என்பதால் பலரும் என்ன நடக்கப்போகிறது என்பதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனிடையே எலக்ட்ரோல் வாக்குகளில் ட்ரம்பை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் பின்  தங்கியுள்ளார். ட்ரம்ப் 198 வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 112 வாக்குகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?