5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

America: வெள்ளை மாளிகையில் ஜோ பைடனை சந்தித்த ட்ரம்ப் – நடந்தது என்ன?

அதிபர் தேர்தலுக்குப் பிறகு பதவியில் இருந்து விலகும் அதிபரும், புதிதாக பதவியேற்கும் அதிபரும் சந்தித்துக் கொள்வது அமெரிக்காவில் வழக்கமாக உள்ள நிகழ்வாகும். இது அமைதியான அதிகார பரிமாற்றத்தின் தொடக்கமாக அமையும். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்த நிலையில் அவர் சந்திப்பை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

America: வெள்ளை மாளிகையில் ஜோ பைடனை சந்தித்த ட்ரம்ப்  – நடந்தது என்ன?
ஜோ பைடன் – டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 Nov 2024 09:21 AM

அதிபர்கள் சந்திப்பு: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தற்போதைய அதிபரான ஜோ பைடனை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.  இந்த சந்திப்பு தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இன்று நான் ஓவல் அலுவலகத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்பை சந்தித்தேன். சுமூகமான  மாற்றம் மற்றும் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்தை முன்னெடுப்பதை நான் எதிர்நோக்குகிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபரிடம் வரவிருக்கும் நிர்வாகத்திற்குத் தேவையானதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய எனது குழு உறுதியாக துணை நிற்கும் என தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார். இருவரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Also Read: US President Election: இரண்டாவது முறையாக அதிபராகும் டிரம்ப்.. எப்போது பதவியேற்பு? கடக்க வேண்டிய முக்கிய நிலைகள் என்ன?

அமெரிக்க நேரப்படி ஓவல் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இந்த சந்திப்பானது நடைபெற்றது. அதிபர் தேர்தலுக்குப் பிறகு பதவியில் இருந்து விலகும் அதிபரும், புதிதாக பதவியேற்கும் அதிபரும் சந்தித்துக் கொள்வது அமெரிக்காவில் வழக்கமாக உள்ள நிகழ்வாகும். இது அமைதியான அதிகார பரிமாற்றத்தின் தொடக்கமாக அமையும். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்த நிலையில் அவர் அப்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் எந்தவித சந்திப்பையும்  நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தல்

உலகமே உற்றுநோக்கிய நிலையில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஓராண்டாகவே இதுதொடர்பான பிரச்சாரங்கள் அங்கு களைகட்டியது.  முதலில் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபரான ஜோ பைடனும் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜோ பைடன் கடுமையான நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் சந்தித்தார். குறிப்பாக ட்ரம்புடன் நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் பதிலளிக்கவே திணறினார்.

இதனை தொடர்ந்து கட்சியிலும் எதிர்ப்பு இருந்ததால் ஜோ பைடன் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் தற்போது துணை அதிபராக பதவி வகித்து வரும் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். டொனால்ட் ட்ரம்ப் மட்டும் கமலா ஹாரிஸ் இருவரும் மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு தங்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். இப்படியான நிலையில் நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று முடிந்தது.

Also Read: எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு பதவி.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய டிரம்ப்!

வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டது. இந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் 47வது அதிபராக 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். 50 மாகாணங்களைச் சேர்த்து மொத்தம் 538 இடங்கள் இருந்த நிலையில் ட்ரம்ப் சார்ந்த குடியரசு கட்சிக்கு 277 இடங்கள் கிடைத்தது. அதே சமயம் பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவை என்று நிலையில் கமலா ஹாரிஸ் சார்ந்த ஜனநாயக கட்சிக்கு 224 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

ட்ரம்பின் இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கதாக மாறியுள்ளது.  அவருக்கு பிரதமர் மோடி தொடங்கி உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவி வகித்த நிலையில் 4 ஆண்டுகள் இடைவெளியில் அவர் மீண்டும் அதிபராக வெற்றி பெற்றுள்ளார். மேலும் இனிமேல் தான் தன்னுடைய ஆட்டம் ஆரம்பம் எனவும் அவர் சூளூரைத்துள்ளார்.

Latest News