Allu Arjun: தமிழில் தான் பேசுவேன்.. தெலுங்கு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அல்லு அர்ஜூன்!
Pushpa The Rule: சென்னையிலிருந்து தான் நான் எனது பயணத்தை தொடங்கினேன். என்னுடைய நினைவுகள் எல்லாம் எங்கிருந்துதான் தொடங்கும். என்னுடைய வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகள் நான் சென்னையில் தான் இருந்தேன். நான் என்ன சாதித்தாலும் இந்த மண்ணுக்குத்தான் நன்றி சொல்வேன்.
நாம் எந்த இடத்துக்குப் போகிறோமோ, அதற்குரிய மொழியில் தான் பேச வேண்டும் என நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார். அதுதான் அந்த மண்ணுக்கு நாம் செய்யும் மரியாதை என அவர் பெருமையாக கூறியுள்ளார். அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் 2ஆம் பாகம் “புஷ்பா – தி ரூல்” என்ற பெயரில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் படக்குழுவினர் பல்வேறு இடங்களிலும் தீவிரமாக பிரமோஷன் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன், இயக்குநர் சுகுமார், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுனின் கருத்துகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதாவது, “நான் பிறந்த இந்த மண்ணுக்கு என் அன்பான வணக்கம். என் தமிழ் மக்களே, சென்னை மக்களே வணக்கம். இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாகும். பல்லாண்டுகளாக இதற்காக காத்துக் கொண்டிருந்தேன். 20 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நிறைய படங்களுக்கு பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளேன். குறிப்பாக புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்காக உலக அளவில் சென்றிருந்தேன். ஆனால் எங்கு போனாலும் சென்னைக்கு வரும்போது கிடைக்கும் உணர்வுகளே தனிதான். உண்மையைத்தான் சொல்கிறேன்.
Also Read: சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
சென்னையிலிருந்து தான் நான் எனது பயணத்தை தொடங்கினேன். என்னுடைய நினைவுகள் எல்லாம் எங்கிருந்துதான் தொடங்கும். என்னுடைய வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகள் நான் சென்னையில் தான் இருந்தேன். நான் என்ன சாதித்தாலும் இந்த மண்ணுக்குத்தான் நன்றி சொல்வேன். நான் எங்கு சென்றாலும் ஒரு சாதாரண சென்னை தி. நகர் பையன் தான். நான் உலக அளவில் சென்றாலும் ஒரு சென்னைப் பையன் இவ்வளவு தூரம் சென்றுள்ளான் என்று நீங்கள் பெருமைப்படுவீர்கள்.
இங்கு வந்திருக்கும் பெரும்பாலான ரசிகர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என்றாலும் நான் இந்த நிகழ்ச்சியில் தமிழில் தான் பேச வேண்டும். காரணம் அது இந்த மண்ணுக்கு நான் கொடுக்கும் மரியாதை. நாம் எந்த மண் மீதும் இருக்கிறோமோ அந்த மொழியை தான் நாம் பேச வேண்டும்” என அல்லு அர்ஜூன் தெரிவித்தார். அவரின் பேச்சுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
புஷ்பா படம்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வசூரில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் குமார் என ஏகப்பட்ட பேர் இந்த படத்தில் நடித்திருந்தனர். செம்மரக்கட்டைகள் கடத்தல் நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகத்தில் புஷ்பாவான அல்லு அர்ஜுன் எப்படி டானாக உயர்ந்தார் என திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.
அவர் எப்படி தனது சாம்ராஜ்யத்தை வளர்த்தார் என்ற பாணியில் இரண்டாம் பாகத்தின் கதை அமைக்கப்பட்டது. இரண்டு பாகங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2 ஆம் பாகத்தில் பின்னணி இசையை தமன் மற்றும் சாம் சி.எஸ். அமைத்துள்ளார்கள். முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடிய நிலையில், இரண்டாம் பாகத்தில் அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டாலும் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு பெரும் வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த நவம்பர் 17ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் விழா நடைபெறும் இடத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சிக்காக இத்தனை லட்சம் பேர் வந்தது இதுவே முதல் முறையாகும். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது