C. V. Ananda Bose: தனக்கு தானே சிலை திறப்பு.. மேற்கு வங்க ஆளுநர் செய்த சம்பவம்..!
West Bengal: பதவியில் இருக்கும்போதே தனது சிலையை நிறுவியதாக ஆளுநர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் திறப்பு விழாவின் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இது விளம்பர ஸ்டண்ட் என்று கூறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தனக்கு தானே சிலை திறந்து வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தான் ஆளுநராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ராஜ்பவனில் தனது சிலையை நேற்று அவர் திறந்து வைத்தார். ஆளுநரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது ஒரு அவமானகரமான விஷயம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. நேற்று ராஜ்பவனில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஓவியக் கண்காட்சி மற்றும் ஓவியப் போட்டியின் தொடக்க விழாவில் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் பங்கேற்றிருந்தார்.
Also Read: Maharastra: தேர்தல் வெற்றி.. கொண்டாட சென்ற மகாராஷ்ட்ரா தேர்தல் வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்!
அப்போது தான் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. பதவியில் இருக்கும்போதே தனது சிலையை நிறுவியதாக ஆளுநர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் திறப்பு விழாவின் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இது விளம்பர ஸ்டண்ட் என்று கூறி ஆளுநர் சி.வி. ஆனந்த போஸை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்பிரகாஷ் மஜூம்டர் கூறுகையில், “நம் கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ் சொந்த சிலையை திறந்து வைத்துள்ளார், இது கேள்விப்படாத ஒன்று. அவருக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக அவர் அதை செய்தார். ஆனால் அடுத்த கட்டம் என்ன? அவர் தனது சிலைக்கு மாலை அணிவிப்பாரா? ஒரு மெகாலோமேனியாவின் அடையாளம்” என்று கடுமையாக விமர்சம செய்துள்ளார்.
இதேபோல் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி தெரிவிக்கையில், “இது அவமானம் என்று கூறினார். மேலும் நமது மேற்கு வங்க மாநிலத்திற்கு துரதிர்ஷ்டவசமானது” என்று கூறினார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சௌமியா ஐச் ராய் “இது மிகவும் வெட்கக்கேடானது. வங்காளத்தின் கலாச்சாரத்தில் ஒரு சிறிய விளையாட்டு விளையாடப்படுகிறது” என்று கடுமையாக கண்டித்தார்.
📜 On November 23, 2024, Indian Museum embraced the spirit of #ApnaBharatJagtaBengal on the twenty-third day of our month-long celebration, to mark the commencement of Dr. C. V. Ananda Bose, the Hon’ble Governor of West Bengal’s third-year in office, as visionary leader of state. pic.twitter.com/qNg7eGhu6Q
— Indian Museum (@IndianMuseumKol) November 23, 2024
ஆனால் ஆளுநருக்கு அவரது சிலையானது கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்றும் கலைஞர் பார்த்தா சாஹா பரிசளித்ததாக சொல்லப்படுகிறது. அவர் ஆளுநரை நேரில் சந்திக்காமல் அவரது புகைப்படத்தை அடிப்படையாக வைத்து சிலையை உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஆளுநர் சி.வி.ஆனந்த போஸால் சொந்தமாக நிறுவப்படவில்லை என்றும், கலைஞர் மற்றும் இந்திய அருங்காட்சியகம் அளித்த பரிசு என்றும் ஆளுநர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இருந்தாலும் உயிருடன் இருக்கும் ஒருவரின் சிலையை நிறுவுவதன் அவசியம் என்ன என்பது குறித்து பலர் கேள்வி எழுப்பினர். இதனிடையே இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆனந்த போஸ், “மேற்குவங்கம் ஒரு பெரிய பூமி. இங்குள்ள மக்கள் மிகவும் பண்பட்டவர்கள். ஆனால் இந்த மாநிலத்தில் செய்யப்படும் அரசியல் மிக மோசமானதாக உள்ளது. அரசியல்தான் இந்த நாட்டின் கடைசியான புகலிடம். அதன் அர்த்தம் என்ன என்று இப்போது எல்லோருக்கும் தெரியும். அது மாற வேண்டும்” என கூறினார்.
Also Read: Maharashtra: நோட்டாவை விட குறைவான ஓட்டு.. பிக்பாஸ் பிரபலத்துக்கு நேர்ந்த சோதனை!
மேலும், “மேற்கு வங்கத்தின் அரசியல் என்னும் உடலில் புற்றுநோயாக இருக்கும் வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு அம்சங்களை மக்கள் தொடர்ந்து இருக்க அனுமதிக்க மாட்டார்கள். இந்த இரண்டு விஷயங்களும் அரசியல் நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இவை ஊக்குவிக்கப்படுகிறது. நான் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மேற்குவங்கத்தில் அரசியல் கட்சியினரின் வன்முறையும் ஊழலும் அதிகரித்து வருகிறது என்பது நம் கண் முன் உள்ள உண்மையாகும் என ஆளுநர் ஆனந்தபோஸ் தெரிவித்தார்.