Tiruvannamalai: திருவண்ணாமலை தீபத் திருவிழா தொடக்கம்.. 10 நாட்கள் என்னென்ன நடக்கும்?
Arulmigu Arunachaleswarar Temple: கார்த்திகை மாதம் வந்து விட்டாலே பலருக்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தான் நினைவுக்கு வரும். அந்த பண்டிகை தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலையார் திருக்கோயிலில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும்.
கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வெகுவிமரிசையாக கொடியேற்றம் இன்று நடைபெற்றது. அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுக்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கார்த்திகை மாதம் வந்து விட்டாலே பலருக்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தான் நினைவுக்கு வரும். அந்த பண்டிகை தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். சிவபெருமானுக்குரிய பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது. பக்தியுடன் இறைவனை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என சொல்லப்படும் இந்த கோயிலில் 10 நாட்கள் தீபத்திருவிழா கொண்டாடப்படும்.
10 நாட்கள் நடப்பது என்ன?
முதல் நாளான (டிசம்பர் 4) இன்று காலை கொடியேற்றம் நடைபெற்ற முடிந்தவுடன் பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனி வருவார்கள். இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரண்டாம் நாள் (டிசம்பர் 5) காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் இந்திர விமானங்களில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.
இதையும் படிங்க: Vellai Vinayagar: வாழ்க்கையில் பிரச்னையா? – இந்த கோயிலில் வழிபடுங்க!
மூன்றாம் நாள் (டிசம்பர் 6) காலை நாக வாகனத்தில் சந்திரசேகரும், இரவில் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனங்களில் பஞ்ச மூர்த்திகளும் பவனி வருவார்கள். நான்காம் நாள் (டிசம்பர் 7) உற்சாகத்தில் காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஐந்தாம் நாள் (டிசம்பர் 8) காலையில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவில் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
ஆறாம் நாள் (டிசம்பர் 9) காலை உற்சவத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகர் வரும் நிலையில், இரவு உற்சவத்தில் வெள்ளி தேரோட்டம் நடைபெறும். ஏழாம் நாள் (டிசம்பர் 10) மகா தேரோட்டம் நடைபெறும். அன்று மாட வீதியில் பஞ்ச ரதங்கள் பவனி வரும். எட்டாம் நாள் (டிசம்பர் 11) காலை உற்சவத்தில் குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மாலையில் பிச்சாண்டவர் உற்சவம், இரவு குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் பவனியும் நடைபெற உள்ளது. ஒன்பதாம் நாள் (டிசம்பர் 12) காலை உற்சவத்தில் புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரும், இரவு உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் கைலாச, காமதேனு வாகனங்களில் பவனி வருகின்றனர்.
இதையும் படிங்க: Karthigai Deepam: திருக்கார்த்திகை எப்போது? வீட்டில் தீபமேற்றும் வழிமுறைகள் இதோ!
இதனைத் தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியானது பத்தாம் நாள் (டிசம்பர் 13) நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் கோயிலுக்கு பின்புறம் உள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்படும். 2668 அடி உயரமுள்ள அந்த மலையில் திரளான பக்தர்கள் மத்தியில் அண்ணாமலை தீபம் ஏற்றப்படும். இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தொடக்க எல்லை தெய்வ வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கும், கார்த்திகை தீப திருவிழாவுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் நடக்க வேண்டி இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.
விழாவெற்றிகரமாக நடத்தப்படும்
பொதுவாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை என்பது வருகிறது. ஆனால் மற்ற மாதங்களில் வரும் பெளர்ணமியை காட்டிலும் கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி மிக மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் தான் பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் சிவன் ஜோதி வடிவமாக காட்சி கொடுத்ததாக வரலாறு சொல்கிறது. இதனை கொண்டாடும் விதமாகவே ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் உள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு கனமழை காரணமாக அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள தீப மலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்றது. இதனால் திட்டமிட்டபடி தீபத்திருவிழா நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் 40 லட்சம் பக்தர்கள் வருகை தந்தாலும் வெற்றிகரமாக தீபத்திருவிழா நடத்தப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.