Vellai Vinayagar: வாழ்க்கையில் பிரச்னையா? – இந்த கோயிலில் வழிபடுங்க!
Temple Special: பொதுவாக ஐப்பசி பௌர்ணமி அன்று சிவனுக்கு மட்டுமே திருமேனியில் அன்னாபிஷேகம் பூசப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். சில இடங்களில் மட்டும் தான் விநாயகருக்கும் நடத்தப்படுவது உண்டு. அதில் ஒன்றுதான் இந்த கோயில்.
பொதுவாக சிவனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் அந்த அன்னாபிஷேகம் தமிழ்நாட்டில் சில கோவில்களில் மட்டும் விநாயகருக்கும் நடைபெறுகிறது. அந்த கோவிலில் ஒன்று தான் தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுளியில் உள்ள வெள்ளை விநாயகர ஆலயம். இந்த மாவட்டத்தில் பிரபலமான வேத விநாயகர் கோயிலும் இதே பெயரில் உள்ளதால் பக்தர்கள் குழப்பம் இல்லாமல் சரியாக இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.
கோயில் உருவான வரலாறு
தஞ்சாவூரை ரகுநாத நாயக்கர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். இவர் தஞ்சை நகரை தனது ஆட்சி காலத்தில் எதிரிகளிடமிருந்து இருந்து காக்க முடிவு செய்தார். உடனடியாக தஞ்சாவூரின் மொத்த நகரத்தையும் சுற்றி கோட்டையையும் அகழியையும் ஏற்படுத்த எண்ணினார். அதற்காக பணியை ஒருவரிடம் ஒப்படைத்த நிலையில் தலைமை கொத்தனாரான அவருக்கு எந்த கட்டிட பணிகளை தொடங்கினாலும் அதற்கு முன் பிள்ளையாரை வணங்குவது பழக்கம்.
அந்த வகையில் கோட்டைக்கான பணிகளை அவசரமாக தொடங்க வேண்டி இருந்ததால் பெரிய அச்சு வெல்லம் ஒன்றை விநாயகராக பாவித்து பூஜை மேற்கொண்டார். பின்னர் மன்னர் சொன்னபடி கோட்டை சுவருக்கான வேலையையும் தொடங்கினார். இதற்கிடையில் அந்த அச்சுவெல்ல பிள்ளையாரை கொத்தனார் வணங்குவதை அறியாத மன்னர் அதனை அங்கிருந்து அகற்ற முயன்றுள்ளார். ஆனால் அது கற்சிலையாக மாறி அசையாமல் இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆச்சரியமடைந்த மன்னர் அந்த வெல்ல பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வெல்ல பிள்ளையார் என பெயரிட்டு அழைக்கப்பட்ட விநாயகர் காலப்போக்கில் வெள்ளை பிள்ளையார் என மாறியது. இது தஞ்சாவூர் நகரை எல்லையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் எல்லைப் பிள்ளையார் எனவும், தஞ்சாவூர் கோட்டைக்கு வெளியே இருப்பதால் வெளிப்பிள்ளையார் எனவும் அழைக்கப்படுகிறது.
பிற்காலத்தில் வந்த நாயக்க மன்னர்களால் இந்த விநாயகருக்கு கோயில் எழுப்பப்பட்டது. அதே சமயம் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி காலத்தில் வாழ்ந்த வைத்தியர்கள் இறை வணக்கமாக வெள்ளைப்பிள்ளையாரை துதித்துள்ளார்கள். அதன் பின்னரே நூல்களை எழுதவும் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகத்தில் வெள்ளை விநாயகர் ஸ்தோத்திரம் உள்ளது.
இந்த வெள்ளை பிள்ளையாருக்கு பைரவ உபாசகர் பாடகச்சேரி சுவாமிகள் பல்வேறு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். அதனால் அவரை சிறப்பிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் அவரது குருபூஜை ஆடிப்பூர தன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
Also Read: Sri Dharmeswar Temple: போராட்டமே வாழ்க்கையாக இருக்கா? – செல்ல வேண்டிய கோயில் இதுதான்!
கோயில் சிறப்பு
இந்த கோயிலில் கிழக்கு நோக்கி ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.அதற்கு முன்பு புகழ்பெற்ற அகழி ஒன்று காணப்படுகிறது. முந்தைய காலத்தில் மக்கள் இதில் புனித நீராடி விநாயகரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ராஜ கோபுரத்தை கடந்து மகா மண்டபத்தை அடைந்தால் இடதுபுற சுவற்றில் சிவகாமி அம்மன் சமேத நடராஜர் சுதை சிற்பம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறிய கோபுரத்துடன் காணப்படும் முன் மண்டபத்தின் எதிரில் பலிபீடம், கொடிமரம் மற்றும் மூஞ்சூறு வாகனம் ஆகியவை உள்ளது. இதனை தொடர்ந்து காணப்படும் அர்த்தமண்டபத்தில் உற்சவர் தரிசனம் தருகிறார். அதேசமயம் தனி விமானத்துடன் கூடிய கருவறையில் சிறு மண்டபத்தில் வெள்ளை பிள்ளையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அது மட்டுமல்லாமல் பஞ்சமி திதி அன்று உற்சவரான வல்லபை விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மேலும் விடையாற்றி உற்சவம் அன்று இந்தப் பிள்ளையாருக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. அந்த நாள் மட்டும் மூலவரான வெள்ளை விநாயகர் சந்தனத்தில் உருவான வல்லபையுடன் தம்பதி சமேதராக காட்சி தருகிறார்.
Also Read: Sabarimala: சபரிமலைக்கு முன் பக்தர்கள் செல்ல வேண்டிய சாஸ்தா கோயில்!
விசேஷ தினங்கள்
சங்கடஹர சதுர்த்தி தோறும் விநாயகருக்கு 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து நடைபெறும் சிறப்பு அலங்காரம் மற்றும் அர்ச்சனை, தீபாராதனை நிகழ்வில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர். தொடர்ந்து 5 சங்கடஹர சதுர்த்தி அன்று 5 தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் விநாயகருக்கு அர்ச்சனை செய்து ஐந்து முறை ஆலயத்தை வலம் வந்து சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சகல சங்கடங்களும் விலகும் என நம்பப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் திருமணம், மகப்பேறு, வேலைவாய்ப்பு என எது தடையாக இருந்தாலும் அது உடனடியாக இந்த கோயிலில் வழிபாடு செய்தால் நிறைவேறும். இப்பகுதி மக்கள் சொத்து பத்திரங்கள், வியாபார ஒப்பந்தம், திருமண பத்திரிக்கை, ஜாதகம் என எந்த விஷயமாக இருந்தாலும் அதன் வெள்ளை விநாயகர் முன்வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மேற்கொள்வோர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் விநாயகருக்கு வண்ண மலர்கள் சாற்றி வழிபட்டால் அவர்கள் விரைவில் நலம் பெறுவார்கள் என ஐதீகமாக உள்ளது. வீட்டில் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கவில்லை என வருத்தப்படும் பெற்றோர் இந்த கோயிலுக்கு வியாழக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் பரிகார பூஜையில் கலந்து கொண்டு பலன் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த நேரத்தில் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் நேரடியாக சந்திப்பதால் வரன் அமைகிறது. ஒவ்வொரு மாதம் ஒரு வியாழக்கிழமை அல்லது தொடர்ந்து 5 வியாழக்கிழமை 21 தீபம் ஏற்றி முல்லை அல்லது மல்லிகை பூச்சரத்தை வல்லபை விநாயகருக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் 21 முறை பிரதட்சணம் செய்து வழிபட்டால் விரும்பும் மணவாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கையாகும்.
மேலும் திருமணம் முடியும் தம்பதியினர் அவர்களுக்கு ஏற்ற நாளில் கோயிலுக்கு வந்து மூலவரான வெள்ளைப் பிள்ளையாருக்கு வெள்ளை வஸ்திரங்கள் சாத்தி வழிபட்டு நன்றி தெரிவிக்கும் வழக்கமும் உள்ளது.இந்த கோயிலில் தினசரி 4 கால பூஜையின் போது விநாயகருக்கு அன்னம் மட்டுமே நைவேத்தியம் செய்வது வழக்கமாக உள்ளது.
பொதுவாக ஐப்பசி பௌர்ணமி அன்று சிவனுக்கு மட்டுமே திருமேனியில் அன்னாபிஷேகம் பூசப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். சில இடங்களில் மட்டும் தான் விநாயகருக்கும் நடத்தப்படுவது உண்டு. அதில் ஒன்றுதான் இந்த கோயில். இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கையாகும். இந்த கோவில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ளது. காலை 7.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.