5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sabarimala: ஐயப்பனுக்கு ஏன் நெய் தேங்காய் அடைக்கப்படுகிறது தெரியுமா?

சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் பக்தர்கள் நெய் தேங்காய் அடைத்து இருமுடி பையில் சுமந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அந்த தேங்காய் என்பது நம் உடம்பு போன்றது. அதில் இருக்கும் நெய் என்பது நமது ஆத்மாவை குறிக்கும்.

Sabarimala: ஐயப்பனுக்கு ஏன் நெய் தேங்காய் அடைக்கப்படுகிறது தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Nov 2024 19:00 PM

பொதுவாக மக்களால் பல்வேறு விதமான கடவுள்கள், வெவ்வேறான உருவங்களில், பெயர்களில் இருந்தாலும் வணங்குவது என்பது அலாதி பிரியமாக இருக்கும். அதிலும் ஐயப்பன் என பெயரை சொன்னாலே நம் உடல் எல்லாம் ஒரு கணம் சிலிர்த்திடும் அளவுக்கு அவர் மீதான பக்தி என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அருள்பாலிக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாசம் சீசன் காலமாகும். வழக்கமாக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் நாளன்று நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து ஐந்து நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு நடை அடைக்கப்படும். ஆனால் கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் மொத்தம் 48 நாட்கள் கோயில் நடை திறக்கப்படும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனம் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசன மேற்கொள்வார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி சுமந்து 18 படிகள் ஏறி ஐயனை காண்பார்கள். அதே சமயம் சில பக்தர்கள் மாலை அணியாமல் விரதம் மட்டும் இருந்து சபரிமலைக்கு வருகை தருகிறார்கள். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சபரிமலையில் தொடர்ச்சியாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Also Read: Sabarimala: வீட்டிலேயே ஐயப்ப பக்தர்கள் கன்னிப்பூஜை எப்படி நடத்தலாம்?

நெய் தேங்காய் அடைக்கும் முறை

சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் பக்தர்கள் நெய் தேங்காய் அடைத்து இருமுடி பையில் சுமந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அந்த தேங்காய் என்பது நம் உடம்பு போன்றது. அதில் இருக்கும் நெய் என்பது நமது ஆத்மாவை குறிக்கும். மாலை அணிந்திருக்கும் பக்தர்கள் மட்டுமல்லாது விரதம் இருக்கும் குடும்பத்தினரும் நெய் தேங்காய் அடைத்து வழங்கலாம். நெய்யை நன்றாக எண்ணெய் வடிவில் காய்ச்சி, மூன்று கண் கொண்ட தேங்காயில் ஒரு கண்ணில் கத்தியால் உடைத்து அதில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

பின் தேங்காயில் சந்தனம் குங்குமம் வைத்து அதில் ஒரு கண் வழியாக காய்ச்சியே நெய்யை சரண கோஷம் சொல்லி ஊற்ற வேண்டும். ஒரு தேங்காயை ஒருவர் முழுவதுமாக ஊற்றலாம். அல்லது அனைவரும் சேர்ந்து சிறிது சிறிதாக கூட ஊற்றி நிறைக்கலாம். பின்னர் தக்கைக் கொண்டு அந்த கண்ணை நன்றாக அடைத்துக் கொள்ள வேண்டும்.

Also Read: Lord Murugan: முருகனுக்கு மாலை அணிபவர்கள்.. பின்பற்ற வேண்டிய விரத முறைகள்!

அந்த காய்ச்சிய நெய்யானது சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்வதற்குள் மீண்டும் கெட்டியான நெய்யாக மாறிவிடும். நாம் சரியாக விரதம் இருந்தால் தேங்காய் முழுவதும் நெய்யாக இருக்கும். நமது விரதத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அது தேங்காய் உடைக்கும் போது அது காட்டிக் கொடுக்கும் என்பது ஐதீகமாகும். இந்த நெய்யை பக்தர்கள் சபரிமலையில் உள்ள ஒரு இடத்தில் ஒப்படைப்பார்கள். அது ஐயப்பனுக்கு அபிஷேகமாக ஊற்றப்படாமல் திருமேனியில் பூசப்படும். நமக்கும் சிறிய பாட்டிலில் நெய் வழங்கப்படும்.

ஒரு பாடலில் பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நாம் காணலாம் என ஜேசுதாஸ் பாடியிருப்பார். அந்த அளவுக்கு அந்த வரிகளுக்கு உண்மையும், பவரும் இருக்கிறது. மேலும் நெய் தேங்காய் அடைப்பவர்கள் மூன்று நாட்கள் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் நெய் தேங்காய் அடைக்கலாம். ஐயப்பன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு விரைந்த நிலையில் அவருக்காக பந்தள மன்னன் நீண்ட நாள் கெடாமல் இருக்கும் வகையில் நெய்யால் செய்யப்பட்ட பண்டங்களை கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. அவர் அதனை இருமுடி ஆக கட்டிக்கொண்டு காட்டுக்குப் புறப்பட்டார். அப்படித்தான் இருமுடிக்கட்டும் பழக்கமும், நெய் கொண்டு செல்லும் வழக்கமும் உருவானதாக வரலாறு தெரிவிக்கிறது.

Latest News