AUS vs IND: சோனமுத்தா போச்சா.. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி!
Team India: 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடாடதால் அவருக்கு பதிலாக இந்தியா அணியின் கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரீத் பும்ரா ஏற்றார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி போட்டி நடந்த நவம்பர் 22ஆம் தேதி தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடாடதால் அவருக்கு பதிலாக இந்தியா அணியின் கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரீத் பும்ரா ஏற்றார். இதனிடையே முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
முதல் இன்னிங்ஸ் நிலவரம்
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கே எல் ராகுல் 26 ரன்கள், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 37 ரன்கள், நிதீஷ் குமார் ரெட்டி 41 ரன்கள் அதிகபட்சமாக எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 49.4 ஓவர்கள் விளையாடி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் ஆகிய தொடக்க நிலை ஆட்டக்காரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியது அதிர்ச்சி அளித்தது. ஆஸ்திரேலியா அணித்தரப்பில் ஜோஸ் ஹேசல்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்சல் ஸ்டார்க், கேப்டன் பேட் கம்மின்ஸ், மிட்சல் மார்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியை தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. சொந்த ஊர் மைதானம் என்பதால் அந்த அணி ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் பும்ராவின் அசாத்தியமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது. மேலும் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோரும் தன் பங்குக்கு விக்கெட் வேட்டை நடத்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 51.2 ஓவர்கள் ஆடி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Also Read: World Chess Championship: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. டிங் லிரன் – டி.குகேஷ் மோதல்!
இரண்டாவது இன்னிங்ஸ் முடிவு
இதனை தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போலவே இதுவும் இருக்கும் என நினைத்த ஆஸ்திரேலியா வீரர்களுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மரண பயத்தை காட்டினர். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களை குவித்தார். விராட் கோலியின் தன் பங்கிற்கு சதம் அடிக்க, கேஎல் ராகுல் 77 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 29 ரன்கள், நித்திஷ் குமார் ரெட்டி 38 ரன்கள் எடுத்தனர். எக்ஸ்ட்ரா வகையில் 55 ரன்கள் கிடைக்க இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 134.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து ஆஸ்திரேலியா அணிக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
2 நாள் ஆட்டம் மீதி இருக்கும் நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா பொறுமையாக ஆடி ஜெயிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அணி மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்சிலும் தொடக்கம் முதல் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் இழந்த வண்ணம் இருந்தது.
Also Read: PAK vs ZIM: வரட்டா மாமே.. ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே!
அந்த அணி 58.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல்- அவுட்டானது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 89 ரன்கள் விளாசினார். மேலும் மிட்சல் மார்ச் 47 ரன்களும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 34 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி தரப்பில் பந்து வீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை அள்ளினர். கேப்டன் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.