Sathyaraj: கருணாநிதி பொறாமைப்பட்ட நிகழ்வு.. நெகிழ்ச்சியுடன் நினைவுக்கூர்ந்த சத்யராஜ்!
என்னுடைய முதல் விருது சட்டம் ஒரு இருட்டறை படத்திற்காக சிறந்த வில்லன் விருதாகும். அதனை வழங்கியதும் கருணாநிதி தான். அதேபோல் கதாநாயகன் ஆன பின்பு முதல் விருதும் அவரின் கையில் இருந்து தான் பெற்றேன். முதலமைச்சருக்கு இதனால் சுயநலத்துடன் தான் நன்றி தெரிவிக்கிறேன்.
முத்தமிழ் பேரவை விழா: கலைஞர் கருணாநிதி பொறாமைப்பட்ட சம்பவம் பற்றி நடிகர் சத்யராஜ் நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில வைரலாகியுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு இசை விழா மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இனி ஆண்டுதோறும் கலைஞர் விருது வழங்கப்படும் என அவர் அறிவித்திருந்தார். அந்த வகையில் முதல் கலைஞர் விருதை நடிகர் சத்யராஜ் பெற்றுக்கொண்டார்.
அது மட்டுமல்லாமல் ராஜரத்தினம் விருது, இயல் செல்வம் விருது, இசை செல்வம் விருது, நாதஸ்வர செல்வம் விருது, தமிழ் செல்வம் விருது, கிராமிய கலை செல்வம் விருது, நாட்டிய செல்வம் விருது ஆகியவையும் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
Also Read: Thirumavalavan Vijay: விஜய்யுடன் மேடையேற மறுக்கும் திருமாவளவன்.. வெளியான பரபரப்பு தகவல்!
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “முத்தமிழ் பேரவை தொடங்கிய காலத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அதற்கான நேரத்தை ஒதுக்கி தனது கடமையாக கருதி கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி வந்தார். அவர் வழியில் நானும் அதனை நிறைவேற்றி வருகிறேன். முத்தமிழ் பேரவை வழங்கும் எந்த விருது கருணாநிதியை விருது வழங்குவது போன்றது. சாதி மதம் என்ற அந்நிய மொழிகளில் பண்பாட்டு தாக்குதல் நடந்தாலும் தமிழும் தமிழினமும் தமிழகமும் நிலைத்து நிற்க நின்ற நிலைக்க தமது பண்பாட்டின் சிறப்பும் தமிழின் வலிமையும் தான் காரணம்”என தெரிவித்தார்.
பொன்விழா காணும் முத்தமிழ்ப் பேரவை சார்பில் கலைச்செல்வங்களுக்கு விருதுகள் வழங்கினேன்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் வழியில், இசையிலும் தமிழ் ஆள வேண்டும். மொழியையும் கலையையும் கண்போல் காப்போம்! pic.twitter.com/klLQEfnUDJ
— M.K.Stalin (@mkstalin) November 24, 2024
சத்யராஜ் பகிர்ந்த சம்பவம்
இந்நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், “பெரியார் படத்தின் 100 வது நாள் விழாவில் தந்தை பெரியார் 25 வருடங்களாக அணிந்திருந்த மோதிரத்தை அவருடைய அருங்காட்சியகத்திலிருந்து திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி எடுத்து அதை கலைஞர் கையில் கொடுத்து எனக்கு அணிவித்து விட சொன்னார்கள். அப்போது கருணாநிதி தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் சில கருத்துக்களை தெரிவித்தார். அதாவது இந்த மோதிரத்தின் மீது பலருக்கும் ஒரு கண் உள்ளது. எனக்கும் ஒரு கண் இருந்தது. இந்த மோதிரம் யாருடைய விரலுக்கு போகுமோ என பல பேர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது தம்பி சத்யராஜ் விரல்களுக்கு சென்றது மகிழ்ச்சிதான். இருந்தாலும் இந்த மோதிரத்தை சத்யராஜுக்கு பொறாமையுடன் அறிவிக்கிறேன் என்ற நகைச்சுவை உணர்வோடு தெரிவித்தார். அவர் கையால் நிறைய விருதுகள் பெற்ற நான், இன்றைக்கு அவருடைய பெயர் தாங்கிய விருது பெற்றுள்ளேன். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன் சந்தோஷப்படுகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய முதல் விருது சட்டம் ஒரு இருட்டறை படத்திற்காக சிறந்த வில்லன் விருதாகும். அதனை வழங்கியதும் கருணாநிதி தான். அதேபோல் கதாநாயகன் ஆன பின்பு முதல் விருதும் அவரின் கையில் இருந்து தான் பெற்றேன். முதலமைச்சருக்கு இதனால் சுயநலத்துடன் தான் நன்றி தெரிவிக்கிறேன். ஆனால் பொதுநலத்துடன் நன்றி கூற வேண்டுமென்றால் கடந்த 3 ஆண்டுகளில் திமுக சார்பாக அவர் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read: Allu Arjun: தமிழில் தான் பேசுவேன்.. தெலுங்கு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அல்லு அர்ஜூன்!
கலைஞரை ஓய்வறியா சூரியன் எனக் குறிப்பிடுவார்கள். அதேபோல் தான் ஸ்டாலினும் கால்களில் சக்கரத்தை கட்டிவிட்டது போல் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு ஓய்வறியாமல் உழைக்கும் உழைப்பிற்கு சொந்தக்காரராக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார். நான் பல மொழி படங்களில் நடிக்கிறேன். ஷூட்டிங்கிற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று வருகிறேன். அங்கெல்லாம் சென்று வரும்போது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது. மற்ற மாநிலங்களில் தலைநகர் மட்டும் தான் செழிப்பாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் எங்கு சென்றாலும் ஒரே மாதிரி செழிப்பாக இருக்கும்” என தெரிவித்தார்.