Actress Kasthuri: “நான் தப்பா பேசல.. அப்படி மாத்திட்டாங்க” – நடிகை கஸ்தூரி விளக்கம்! - Tamil News | actress kasthuri clarified her speech about telugu people | TV9 Tamil

Actress Kasthuri: “நான் தப்பா பேசல.. அப்படி மாத்திட்டாங்க” – நடிகை கஸ்தூரி விளக்கம்!

தெலுங்கு மக்கள் குறித்து கஸ்தூரி பேசிய கருத்துகள் சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்து கஸ்தூரி தனது கருத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டார். இதேபோல் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டியும் கஸ்தூரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.

Actress Kasthuri: “நான் தப்பா பேசல.. அப்படி மாத்திட்டாங்க” - நடிகை கஸ்தூரி விளக்கம்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

04 Nov 2024 17:10 PM

நடிகை கஸ்தூரி: தெலுங்கு மக்கள் குறித்து தான் தெரிவித்த கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று பிராமண சமூகத்தின் மீது தொடர்ந்து எழுந்து வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட அரசியல் சார்ந்த தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரியில் கருத்து கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

கஸ்தூரி பேசியது என்ன?

திராவிடம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்பு தான் முதல் கொள்கையாக உள்ளது. அதற்கு அவர்கள் கையில் எடுப்பது பிராமணர்களை எதிர்ப்பது தான். பொய்யான காரணங்களை கூறி சமுதாயங்களை பிளவுபடுத்த வேண்டும் என்பது திராவிடம் பேசுபவர்களின் நோக்கமாக இருப்பதாகவும், யார் வந்தேறி என ஆராய்ச்சி செய்தால் திமுகவின் ஓட்டு பிரிந்து விடும் எனவும் கஸ்தூரி கடுமையாக விமர்சித்தார்.

அதேசமயம் சுதந்திரப் போராட்டத்தில் உயிரை கொடுத்தவர்கள் பெரும்பாலும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். தமிழ் பிராமணர்களை ஆரிய வந்தேறிகள் என்கிறார்கள். கைபர் கணவாய் வழியாக பல மதத்தினர் வந்தார்கள். அதைப் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தால் உங்களின் ஓட்டு தான் குறையும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல் பிராமணர்களைப் பற்றி தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த தலைமுறையில் யாராவது இறந்தால் கூட கருமாதி செய்வதற்கு பிராமணர்கள் இருப்பார்களா என்று கவலை எழுந்துள்ளது. வெள்ளையாக இருப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என அய்யரையும், ஐயங்காரையும் மையப்படுத்தி தான் கூறப்பட்டது. சங்க இலக்கியம் காலம் தொட்டு தமிழர்கள் பல்வேறு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். கோயில்களில் தெய்வத்துக்கு சேவை செய்து வந்திருக்கின்றனர்.

Also Read: கட்டிலில் படுத்துறங்கிய தந்தை, மகன்.. இருவரும் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.. நடந்தது என்ன?

தெலுங்கு மக்கள் குறித்து பேச்சு 

ஆரிய பண்பாடு வந்த பிறகு சத்திரியர்கள், வைசியர்கள் போன்ற பாகுபாட்டில் எப்படி மற்ற சாதியினர் இணைந்து கொண்டார்களோ அதே போல் கோயில் பணிகளில் சிவாச்சாரியார்கள், ஐயங்கார்கள், அய்யர்கள், பண்டாரங்கள் ஆகியோர் இணைந்து கொண்டனர். இவற்றையெல்லாம் மறந்துவிட்டு நேற்று வந்தவர்கள் போல அய்யரையும், ஐயங்காரையும் நடத்துகின்றனர். மன்னர்களின் அந்தப்புரம் மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் எல்லாம் இன்று தமிழ் எங்கள் இனம் என சொல்லும் போது எப்போதோ வந்த  அய்யர்களை தமிழர்கள் இல்லை என சொல்ல நீங்கள் யார்?

அதனால் தான் நீங்கள் திராவிடர் என்ற சொல்லை கொண்டு வந்திருக்கின்றனர். இங்கு தெலுங்கு பேசுபவர்களுக்கு நிறைய கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அமைச்சரவையில் 5 தெலுங்கு மொழி பேசும் நபர்கள் உள்ளனர். நம் உரிமையையும் பிழைப்பையும் அவர்களிடம் இருந்து பிடுங்காமல் நாம் தடுக்க வேண்டும்” என கஸ்தூரி தெரிவித்தார்.

குவிந்த கண்டனமும்.. விளக்கமும்

இதனிடையே தெலுங்கு மக்கள் குறித்து கஸ்தூரி பேசிய கருத்துகள் சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்து கஸ்தூரி தனது கருத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டார். இதேபோல் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டியும் கஸ்தூரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.

Also Read: CM MK Stalin: திமுக வளர்வது பிடிக்கல.. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்நிலையில் கஸ்தூரி இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தெலுங்கு மக்கள் குறித்து தான் பேசிய பேச்சு தவறாக திரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மனதை புண்படுத்தி விட்டதாகவும் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்” என  ஆவேசமாக தெரிவித்தார். மேலும், “பிராமணர்களை வந்தேறிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்று தான் நான் கேட்டேன். என் மாமியார் வீட்டில் இருப்பவர்களும் தெலுங்கு பேசுபவர்கள் தான். என்னை தெலுங்கு பேசும் மக்கள் மருமகளாகவும், அவர்கள் வீட்டு மகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அதேசமயம், “தமிழும் தெலுங்கும். எனக்கு இரு கண்கள் போன்றது எனக் கூறிய கஸ்தூரி பொய்யான குற்றச்சாட்டுக்கு ஓடி ஒளியும் ஆள் நான் இல்லை” எனவும் தெரிவித்தார். மேலும் எனக்கு குடிப்பழக்கமே கிடையாது நிலையில் என்னை ஓசி குடி, குடிகாரி என சமூக வலைதளங்களை சித்தரிக்கிறார்கள் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!